Tamil Nadu Government Scheme; பெண்களுக்கு குஷி.! இலவசமாக தையல் இயந்திரம் பெற சூப்பர் சான்ஸ்- உடனே விண்ணப்பிக்க அழைப்பு
Free sewing machines: பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், சொந்தமாக தொழில் தொடங்கிடவும் இலவசமாக தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்திற்கு விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

பெண்களின் முன்னேற்றத்தில் அரசின் பங்கு
பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் பெண்கள் சுயமாக முன்னேறும் வகையில் கடன் உதவி திட்டம், மானிய உதவி திட்டம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி என பல திட்டங்களை நடைமுறையில் உள்ளது. மேலும் பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் உதவி திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் பெண்கள் முன்னேற்றத்திற்காக இலவசமாக தையல் இயந்திரமும் வழங்கப்படுகிறது. எனவே தையல் இயந்திரத்தை பெறுவதற்கு உடனே விண்ணப்பிக்க தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
இலவசமாக தையல் இயந்திரம்
அந்த வகையில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சமூக நலத்துறையின் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற உரிய ஆவணங்களுடன் இ - சேவை மையத்தில் இணையத்தில் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். இலவசமாக தையல் இயந்திரம் பெறுவதற்கு பல்வேறு தகுதிகளும் விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.1,20,000/- க்கு மிகாமல் இருக்க வேண்டும் 21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் குறைந்தது 3 மாத கால முதல் 6 மாத கால தையல் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.தீன்தயாள் உபாத்யாய கௌசல்ய யோஜனா திட்டத்தில் தையல் பயிற்சி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிபந்தனைகள் - ஆவணங்கள்
பயிற்சி சான்றிதழ் வைத்திருப்பவர்கள் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வட்டாட்சியரால் வழங்கப்பட்ட விதவை மற்றும் கணவனால் கைவிடப்பட்டதற்கான சான்று, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 மற்றும் அசல் சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் இணையத்தில் பதிவேற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து பதிவேற்றம் செய்யப்பட்ட ஒப்புகை சீட்டுடன் அதன் நகல்களை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பம் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் இது தொடர்பாக குறித்த தகவலுக்கு 0424-2261405 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முன்னாள் ராணுவ வீர்கள் குடும்பத்திற்கு தையல் இயந்திரம்
இதே போல சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் இலவச தையல் இயந்திரம் பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார். முன்னாள் படைவீரரின் மனைவி மற்றும் கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் குறைந்தது மூன்று மாத தையற்பயிற்சி முடித்து சான்று பெற்றிருப்பின் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் பயிற்சி வழங்கிய நிறுவனத்தால் இலவச தையல் இயந்திரம் வழங்கப்படாத நிலையில் தையல் இயந்திரம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேல் விவரங்களுக்கு சென்னை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசி வாயிலாக 044-22350780 தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.




















