”ஆடு தான் என்னோட அடையாளம்... ஆடு தான் என்னோட இனிஷியல்” - அண்ணாமலையில் வைரல் வீடியோ
ஆட்டை பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் என தோன்றும். ஆடு என என்னை யாராவது சொன்னால் பிரச்சனை இல்லை. ஆடு என்னுடைய அடையாளம், ஆடு என்னுடைய அங்கீகாரம், ஆடு என்னுடைய இனிஷியல்
ஆடு தான் என்னுடைய அடையாளம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாஜக மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை திமுகவை எதிர்த்து அவ்வபோது விமர்சனங்கள் செய்து மாநில அளவில் தவிர்க்க முடியாத தலைவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். ரபேல் வாட்ச், திமுக பைல்ஸ், பாராட்டு, விமர்சனம், சர்ச்சை என தொடர்ந்து ஊடக வெளிச்சத்தில் இருக்கும் அண்ணாமலை எப்பொழுதும் பேசப்படும் தலைவராக இருந்து வருகிறார். இதனால், அண்ணாமலை தேசிய அளவில் பாஜக கட்சியில் முக்கியத்துவம் வாய்ந்த நபராகவும் மாறியுள்ளார். ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த இவர் பதவியை ராஜினாமா செய்து தன்னை முழு நேர அரசியல்வாதியாக ஈடுபடுத்தி கொண்டதுடன், குறைந்த காலத்திலேயே தமிழக பாஜக தலைவராக உயர்ந்தார். தனது தலைமையில் தமிழகத்தில் பாஜக ஆணித்தரமாக காலூன்றுவதர்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி ’என் மண் என் மக்கள்’ என்ற மக்கள் நடைப்பயணத்தை தொடங்கி உள்ளார். கடந்த 28ம் தேதி ராமேஸ்வரத்தில் இருந்து தொடங்கப்பட்ட யாத்திரை 3வது நாளை எட்டியுள்ளது. 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று மத்தியில் ஆளும் பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனைகளை எடுத்துரைக்கும் விதமான நடைப்பயணம் இருக்கும் என அண்ணாமலை அறிவித்திருந்தார்.
ராமேஸ்வரத்தில் நடைப்பயணத்தை தொடங்கிய அண்ணாமலை மக்களை சந்தித்து வருகிறார். இந்த நிலையில் சமூக ஊடகம் ஒன்றில் அண்ணாமலை அளித்த நேர்க்காணல் ஒன்று வைரலாகி வருகிறது. அந்த நேர்காணலில் அண்ணாமலையிடம் ஆடு ஒன்று அழைத்து வரப்படுகிறது. அதை பார்த்து பாசமாக தட்டிக்கொடுத்த அண்ணாமலை, தனக்கும் ஆடுக்கும் உள்ள நெகிழ்ச்சியான தருணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அவர் பேசும்போது, ”ஆடு இல்லை என்றால் நான் இங்கு இல்லை. என்னுடைய அப்பா, அம்மா ஆடு விற்று தான் என்னை படிக்க வைத்தார்கள். ஆட்டுக்குட்டியை விற்று தான் எனக்கான செலவு செய்தார்கள். என் அப்பாவின் 90 சதவீத வருமானமே ஆட்டில் இருந்து தான் வந்தது. ஆட்டின் மீது மிகப்பெரிய மரியாதை உள்ளது. ஆட்டை பார்த்தால் கையெடுத்து கும்பிட வேண்டும் என தோன்றும். எங்களை எல்லாம் வளர்த்து விட்டது ஆடு தான். ஆடு என என்னை யாராவது சொன்னால் பிரச்சனை இல்லை. ஆடு என்னுடைய அடையாளம், ஆடு என்னுடைய அங்கீகாரம், ஆடு என்னுடைய இனிஷியல். கிராமத்தில் இருப்பவர்களுக்கு தான் ஆடு எவ்வளவு முக்கியமானது என தெரியும். நகரத்தில் இருப்பவர்களுக்கு அது தெரியாது. என்னை ஆடு, ஆடு என்று சொல்லும் போது என்னுடைய வளர்ச்சி தான் அதிகரித்துள்ளது” என நெகிழ்ச்சியாக கூறினார்.
View this post on Instagram
தன்னை ஆடு என விமர்சிக்கும் எதிர்கட்சிகளுக்கு தரும் பதிலடியாக அண்ணாமலை பேசி உள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.