Speaker Appavu: ஏழை எளிய மக்களை தாங்கி பிடிக்கின்ற பண்புள்ள முதல்வர் நம் முதல்வர் - சபாநாயகர் அப்பாவு பெருமிதம்!
கண் தெரியாதோர் குருடர் என்றெல்லாம் பேசுகின்ற நிலை இருந்தபோது கலைஞர் தான் அவ்வாறான இழிவு சொற்களால் அவர்களை அழைக்கக்கூடாது, அவர்கள் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு மாறுபட்ட திறன் இருக்கின்றது என்றார்
நெல்லையை அடுத்த பாளையங்கோட்டையில் செயல்படும் பார்வைத்திறன் குறைபாடு உடையோர் மேல்நிலைப் பள்ளியில் பழைய மாணவர்கள் பேரவை சார்பில் பழைய மாணவர்கள் சங்கத்தின் கூடுகை விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது பேசுகையில், ஊனமுற்றோர், கண் தெரியாதோர் குருடர் என்றெல்லாம் பேசுகின்ற நிலை இருந்தபோது தலைவர் கலைஞர் தான் அவ்வாறான இழிவு சொற்களால் அவர்களை அழைக்கக்கூடாது, அவர்கள் மாற்றுத்திறனாளிகள். அவர்களுக்கு மாறுபட்ட திறன் இருக்கின்றது. அவர்களை கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அழைக்க கூடாது என்று சொல்லி உலகிற்கே மாற்றுத் திறனாளிகள் என்று பெயரிட்டு பெருமை சேர்த்தவர். தொடர்ந்து அவர்தான் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு தந்து மகிழ்ந்தார்.
ஒரு மாற்றுத்திறனாளி ரோட்டில் சென்றால், இறங்கி உடனடியாக என்ன என்று கேட்கின்ற பண்பு, மறைந்த தலைவர் கலைஞருக்கு உண்டு. அதன்பின் இன்றைய முதல்வர் ஸ்டாலின் உங்களது பிரச்சனையை என்னவென்று காது கொடுத்து கேட்கின்ற ஒரு நல்ல முதலமைச்சராக இருக்கின்றார். உங்களுடைய பராமரிப்பு செலவிற்காக 1500, 2000 என வழங்கி வருகிறார். அதிலும் மிகவும் பாதிப்படைந்தவர்களுக்கு மேலும் 1000 ரூபாய் பராமரிப்பு செலவிற்கு கொடுக்கக் கூடியவர். இன்றைய முதல்வர் 80 சதவீதத்திற்கும் மேல் ஊனம் இருந்தால் இந்த வாய்ப்பை கொடுத்துக் கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் மட்டும் ஒன்றல்ல இரண்டல்ல 2 லட்சத்தி 36 ஆயிரத்து 456 மாற்றுத் திறனாளிகளுக்கு இன்றைய முதல்வர் ஸ்டாலின், அவர்களுடைய தேவைக்கு தகுந்தாற்போல் பராமரிப்பிற்காக மாதந்தோறும் 527 கோடி ரூபாய் நிதியை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். கண் காது மற்றும் உடலில் பல உறுப்புகளில் ஊனமடைந்து அவர்கள் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு பணி இல்லை என்றால் 600 ரூபாயும் 12 ஆம் வகுப்பு படித்து பணி இல்லை என்றால் 750 ரூபாயும் பட்டப்படிப்பு படித்து எந்த வாய்ப்பும் இல்லை என்றால் மாதம் 1000 ரூபாய் தொடர்ந்து பத்து ஆண்டு காலம் அல்லது வேலை கிடைக்கும் வரை வழங்கும் திட்டத்தை இன்றைய முதல்வர் ஸ்டாலின் தான் தந்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் 92 இடங்களில் ஆதரவு இல்லங்களை தொடங்கி காது கேளாதவர்களுக்கென்று தனியாக, கண் தெரியாதவர்களுக்கு தனியாக, கால் நடக்க முடியாதவர்களுக்கு தனியாக என்னென்ன ஊனங்கள் இருக்கின்றதோ அதற்கு என்ன ஆதரவு தேவைப்படுகிறது என அனைத்து ஆதரவையும் கொடுக்கின்ற வண்ணம் தமிழ்நாட்டில் பிறந்த ஒருவரும் சாமானியன் அல்ல, நான் இருக்கிறேன் உங்களை தாங்கி பிடிக்க என்று சொல்லி 92 நிறுவனங்கள் மூலம் உங்களுக்கு பயிற்சி தந்து கொண்டிருக்கிறார். அது மட்டுமல்ல மாற்றுத்திறனாளி நண்பர்கள் திருமணம் செய்ய வேண்டும் என்று சொன்னால் அவர்களுக்கு திருமண உதவி தொகையாக 8 கிராம் தங்கமும், 25,000 நிதியையும் வழங்குகின்றவர் இன்றைய முதல்வர். இதுதான் சாமானிய மக்களை ஏழை, எளிய மக்களை மாற்றுத் திறனாளிகளை தாங்கிப் பிடிக்கின்ற ஒரு பண்பு, நம்முடைய ஆட்சியில் இருக்கின்ற நம்முடைய முதல்வர் அவர்களுக்கு இருக்கிறது என்றால் இதைவிட சிறந்த பண்புள்ள முதல்வர் நமக்கு கிடைக்க மாட்டார்.. அப்படிப்பட்ட பண்பான முதல்வர் நம் முதல்வர் என தெரிவித்தார்.