புத்தர் சிலை, தலைவெட்டி முனியப்பன் சிலையாக மாறியது எப்படி..? - உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
தாமரை பீடத்தில் "அர்த்த பிரமோசனம்" என்று சொல்லப்படும் அமர்ந்த நிலை கொண்டதாக அச்சிலை காட்சி அளிக்கிறது. சிலையில் உள்ள இரண்டு கைகளும் "தியான முத்திரை" நிலையில் உள்ளது.
சேலம் மாநகர் கோட்டை பகுதியில் தமிழக அறநிலையத் துறைக்கு சொந்தமான தலைவெட்டி முனியப்பன் மற்றும் திருமலையம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. அறநிலையத் துறைக்கு சொந்தமான இக்கோவில் இந்திய புத்த சங்கத்திற்கு சொந்தமான கோவில், அங்குள்ள சிலை தலைவெட்டி முனியப்பன் சிலையல்ல. அது புத்தர் தியான ரூபத்தில் அமர்ந்துள்ள சிலை என்று கடந்த 2011 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்திய புத்த சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கான நீதிமன்ற ஆணை தற்போது சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ளது.
அதில், "சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில், 'தலைவெட்டி முனியப்பன்' கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலை. அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது. அதோடு சிலை மட்டுமின்றி, அங்குள்ள 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அறநிலையத் துறை மற்றும் முதல்வர் தனி பிரிவிற்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட நிலையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழக அறநிலையத்துறைக்கு சொந்தமான தலைவெட்டி முனியப்பன் மற்றும் திருமலையம்மன் திருக்கோவிலில் உள்ள சிலை தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா? என்று தமிழகத் தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் சேலம் தலைவெட்டி முனியப்பன் கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பித்தனர். அதில், கோவில் கட்டிடம் நவீன தோற்றத்தில் உள்ளது. அங்குள்ள சிலை கடினமான கல்லால் செதுக்கப்பட்ட சிலை. தாமரை பீடத்தில் "அர்த்த பிரமோசனம்" என்று சொல்லப்படும் அமர்ந்த நிலை கொண்டதாக அச்சிலை காட்சி அளிக்கிறது. சிலையில் உள்ள இரண்டு கைகளும் "தியான முத்திரை" நிலையில் உள்ளது. புத்தர் சிலை காண அடையாளங்கள் சிலையின் தலைப்பகுதியில் உள்ளது. தொல்பொருள்கள் மற்றும் வரலாற்று சான்றுகளை ஆய்வு செய்ததில், கோவிலில் உள்ள சிலை மகாலட்சணங்களை கொண்டுள்ள புத்தரின் சிலை என தொல்லியல் துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பின்னர், அரசு தரப்பில் ஆஜராளர் வழக்கறிஞர், தலைவெட்டி முனியப்பன் சிலை என கருதி பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்த தமிழக இந்து அறநிலையத்துறை இடமே இக்கோவிலை ஒப்படைக்க வேண்டும் என வாதித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, தொல்லியல் துறையின் அறிக்கையில் பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை என நிரூபிக்கப்பட்ட நிலையில், அங்குள்ளது தலைவெட்டி முனியப்பன் சிலை என அறநிலையத்துறை இடம் ஒப்படைக்க இயலாது. எனவே, சிலை உள்ள பகுதியை தமிழக தொல்லியல் துறை தனது கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ள கற்சிலை புத்தர் சிலை தான் என அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், சிலை உள்ள இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம். ஆனால் புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகளை செய்வதற்கு அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட்டு இவ்வழக்கை நீதிபதி முடித்து வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்