Police Constable Punished: வேலை இங்க, விஸ்வாசம் அங்கயா.? விஜய்யை பார்க்கப்போன கான்ஸ்டபிளுக்கு கிடைத்த கூலி...
மதுரையில், தவெக தலைவர் விஜய்யை வரவேற்பதற்காக பர்மிஷன் போட்டுவிட்டு சென்ற காவலர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரைக்கு வந்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை வரவேற்கச் சென்ற காவலர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த காவலர் கதிரவன் மார்க்ஸ்
மதுரை தெப்பக்குளம் குற்றப்பிரிவு காவலராக பணியாற்றுபவர் கதிரவன் மார்க்ஸ். இவர், சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்புப் பணிக்காக, விளக்குத்தூண் காவல் நிலையத்தில் மாற்றுப் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 1-ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் கதிரவன் மார்க்ஸ் பணியில் இருந்தார்.
பர்மிஷன் போட்டு விஜய்யை பார்க்கச் சென்ற கதிரவன்
கடந்த 1-ம் தேதி, கொடைக்கானலில் நடைபெறும் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் மதுரைக்கு விமானத்தில் சென்றார். இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பணியில் இருந்த கதிரவன் மார்க்ஸ், அவசர வேலைக்காக பர்மிஷன் வேண்டும் என்று கேட்டு, வாங்கிச் சென்றுள்ளார்.
அப்படி சென்ற அவர், வேறு எங்கும் போகவில்லை, விஜய்யை வரவேற்க மதுரை விமான நிலையம் சென்றுள்ளார். யூனிஃபார்மை கழற்றிப்போட்டுவிட்டு, கட்சிக்காரராக மாறிய மார்க்ஸ், கட்சித் துண்டை தோளில் அணிந்தபடி, அங்கு வந்த தவெக தலைவர் விஜய்யை வரவேற்றுள்ளார்.
விஜய்யை பார்த்தது தனது நல்ல நேரம் என்று அவர் நினைத்திருக்கலாம். ஆனால், அவரது கெட்ட நேரமும் இன்னொருபுறம் வேலை செய்துள்ளது. ஆம், அவர் விஜய்யை வரவேற்ற வீடியோ வைரலாகி, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் கண்ணில் பட்டுள்ளது. அவ்வளவுதான், பணி நேரத்தின்போது பர்மிஷன் போட்டுவிட்டு விஜய்யை பார்க்கச் சென்றதால், காவலர் கதிரவன் மார்க்ஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டள்ளார்.
நடவடிக்கை தவறு என வாதிடும் நெட்டிசன்கள்
தற்போது திமுக ஆட்சி நடைபெற்று வருவதால், வேலை இங்கே, விஸ்வாசம் அங்கேயா என்று கேட்பதுபோல், காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு இணையவாசிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஒருவர், தனது பணியின்போது பர்மிஷன் போடுவதோ அல்லது லீவே போடுவதோ அவரது உரிமை என்றும், அந்த நேரத்தில் அவர் என்ன செய்தாலும் அது அவருடைய சொந்த விருப்பமே தவிர, அதற்காக நடவடிக்கை எடுப்பது தவறு என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
காவலர் சென்றதில் தவறில்லை, ஆனால், ஒரு அரசு ஊழியராக கட்சிக் கொடியை பயன்படுத்தியது தவறுதான், அதற்காக அவருக்கு எச்சரிக்கை விடுத்து, கண்டனம் தெரிவித்திருக்கலாம். அதற்காக சஸ்பெண்ட் செய்வது சரியில்லை என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த காவலர் விஜய்க்கு தான் ஓட்டு போடுவார், உங்களால் என்ன செய்ய முடியும் என்றும் ஒரு நெட்டிசன் கொந்தளித்துள்ளார்.





















