(Source: Poll of Polls)
”ஆன்லைன் சூதாட்டத்தால் இனி ஏற்படும் பாதிப்புக்கு யார் பொறுப்பு என்பதை மக்களிடமே விடுகிறோம்..” : அமைச்சர் ரகுபதி பேட்டி..
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ”ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கான நோக்கம் மசோதாவின் முகப்புரையிலேயே தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி, நோய் என்றே வகைப்படுத்தப்பட்டுள்ளது. அந்த நோயை ஒழிக்கவே பாடுபட்டு வருகிறோம்.
ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்தவுடன் சட்டம் நடைமுறைக்கு வரும். 95% மக்கள் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தனர். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. ஆனால் ஒப்புதல் தாமதப்படுத்தியதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இனியும் தாமதிக்காமல் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்நாட்டிற்கு பிழைப்பு தேடி வந்து தென்காசி மாவட்டம் கரிவலம்வந்த நல்லூரில் கூலி வேலை செய்து வந்த ஒடிஸா பெண் பந்தனா மஜ்கி, ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.70 ஆயிரத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்வு மிகுந்த வேதனை அளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை செல்லாது என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு பிறகு ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் நிகழும் 33-ஆவது தற்கொலை இதுவாகும். கடந்த இரு மாதங்களில் இது நான்காவது தற்கொலை ஆகும்.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான ஒவ்வொரு நகர்வும் பெரும் போராட்டத்திற்கும் பிறகும், சில உயிரிழப்புகளுக்கு பிறகும் தான் சாத்தியமாகிறது. 15 மாதங்களில் விலைமதிப்பற்ற 33 உயிர்களை பறி கொடுத்தும் கூட, ஆன்லைன் சூதாட்டம் இன்னும் தடை செய்யப்படவில்லை! ஒரு புறம் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் காலாவதியாகி விட்டது; மறுபுறம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. அதனால் தமிழ்நாடு இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் வேட்டைக்காடாக மாறப்போகிறது
ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஏற்படவிருக்கும் பேராபத்தை தமிழக ஆளுனர் உணர வேண்டும். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று பதிவிட்டிருந்தார்.
காலவதியான ஆன்லைன் சூதாட்டச் சட்ட மசோதா:
தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்டச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், ஆன்லைன் சூதாட்டத்துக்கு எதிரான அவசரச் சட்டம் காலாவதியாகியுள்ளது.
ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டிருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடிதம் வாயிலாக விளக்கம் அளித்து இருந்தது, ஆனாலும் ஆளுநர் கையெழுத்து போடாததால், இந்த அவசரச் சட்டம் காலாவதியாகியுள்ளது. நேற்றுடன் அவசரச் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆன்லைன் சூதாட்ட அவசரத் தடைச் சட்டம் இன்றுடன் காலாவதியாகியுள்ளது. அவசரச் சட்டத்திற்கு ஆறு மாதங்களுக்குள்ளும், சட்ட மசோதாவிற்கு ஆறு வாரத்திற்குள்ளும், கவர்னர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிலையில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசரச் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். ஆனால் சட்ட மசோதாவிற்கு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகள் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தன நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால், அவசர சட்டம் இன்றுடன் காலாவதியாக்கியுள்ளது.