School Leave: ராணிப்பேட்டை, வேலூர் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தொடர் மழை காரணமாக ராணிப்பேட்டையில் இன்று தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டையில் தொடர் மழை காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5ம் வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர்.
விடுமுறை அறிவிப்பு:
இதுதொடர்பான அறிவிப்பில், ”ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர் கனமழை காரணமாக ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக” மாவட்ட ஆட்சியர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார். இதே போல வேலூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளுக்கு இன்று (26.09.2023) ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் பெ. குமாரவேல் பாண்டியன் அறிவித்துள்ளார். அதே நேரம், காஞ்சிபுரத்தில் வழக்கம் போல் பள்ளி மற்றும் கல்லூரிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விடாது கொட்டும் மழை:
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரவு மற்றும் மாலை வேளைகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று இரவு வேலூர் மற்றும் ராணிப்பேட்டை பகுதியில் இடி மின்னலோடு கனமழை வெளுத்து வாங்கியது. விடிய விடிய பெய்ததோடு, பகலிலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனையடுத்து காய்ச்சல் பரவுவது மற்றும் நோய்த்தொற்று ஏற்படுவதை கருத்தில்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தொடக்கப் பள்ளி மாணவர்கள் பாதிப்பு ஏற்படாத வகையில் ராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தவிட்டுள்ளனர்.