Gayathri Raghuram : மெரினாவில் பேனா சின்னம் தமிழ்நாட்டின் வரலாறாக இருக்கணும்; காயத்ரி ரகுராம்
Gayathri Raghuram : தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான் என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக மெரினா கடற்கரையில், 42-மீ உயரத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினர்களிடமிருந்து ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. மக்களின் பல லட்சம் வரிப்பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான் என்று நடிகை காயத்ரி ரகுராம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்திற்கு அருகே, மெரினா கடற்கரை அமைந்துள்ள வங்காள விரிகுடா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பேனாவை, ரூபாய் 81 கோடி செலவில், 42 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
காயத்ரி ரகுராம் ஆதரவாக கருத்து:
புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும். இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும்.
பேனா பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும். இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.
பேனாவுக்கு ஏன் பொதுமக்களின் பணம்? இந்த பேனா சிலை வித்தியாசமானதாகவும், ஒரு சுவாரஸ்யமான சுற்றுலா தலமாக இருந்தால், சுற்றுலா மூலம் அரசாங்கம் லாபம் ஈட்டினால் அதை அரசுப் பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு அல்லது மருத்துவமனைகளுக்கு பயன்படுத்தலாம். அது அரசாங்கத் திட்டத்தைப் பொறுத்தது.
மக்களின் பல லட்சம் வரிப்பணம் ஒரு மாநிலத் தலைவரின் இசட் பிரிவுப் பாதுகாப்பிற்குப் பயன்படுத்தப்படும்போது, தமிழ்நாடு மக்களின் வரிப் பணம் ஜனநாயகத்தைக் குறிக்கும் பேனா சிலைக்கு பயன்படுத்துவது சரிதான்.
மற்றவர்களைப் பற்றி சிந்திக்காமல் தன்னைப் பற்றி மட்டுமே சிந்திக்கும் ஒரு தலைவரை ஆதரிப்பதை விட சுதந்திரமான எண்ணங்களுடன் என் மனதைப் பேசுவதை நான் விரும்புகிறேன். மாநிலத்திற்கு/நாட்டிற்கு சேவைக்காகவும், உதவுவதற்காகவும் ஒரு கட்சியில் நாம் சேர வேண்டும்.
இவ்வாறு அவரின் டிவிட்டர் பதிவின் மூலம் கலைஞர் நினைவு பேனா சின்னத்திற்கு தனது ஆதரவினைத் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கல் காரணமாக காயத்ரி ரகுராம் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து வெளியேறினார். தற்போது அண்ணாமலை செயல்பாடுகளை விமர்சித்து வருகிறார்.
The Pen is Mightier Than The Sword- the power of mass appeal is stronger than the force used against it. writing is more effective than forces or fighting. writers are more commanding than strong soldiers.
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) January 31, 2023
அனுமதி:
சமீபத்தில் பேனா சின்னம் அமைப்பதற்கு, தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது
விண்ணப்பத்தை பரிசீலனை செய்த மத்திய அரசு, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.






















