குப்பையில் கிடந்த 10 சவரன் நகைகளை ஒப்படைத்த தூய்மை பணியாளர்.. குவியும் பாராட்டுக்கள்..
துப்புரவு பணியாளர் மோகன சுந்தரத்தின் ஒப்பற்ற நேர்மையை பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
சென்னை மாநகராட்சியில் தூய்மை ஊழியராக பணிபுரிந்து வரும் மோகனசுந்தரம் (55) குப்பையில் கிடந்த 10 சவரன் நகையை கண்டெடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.
சென்னை ராயபுரம் ஆடுதொட்டி, ஆஞ்சநேயர் கோவில் தெருவில் வசித்து வருகிறார் மோகனசுந்தரம். இவர் நேற்று கொருக்குபேட்டை ஏகப்பன் தெருவில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். பின்னர், கண்ணன் ரவுண்டானா அருகில் உள்ள குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு சேகரித்த குப்பையை கொண்டு சேர்த்தார். அப்போது, குப்பையை தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டபோது ஒரு பிளாஸ்டிக் பையில் 10 சவரன் தங்க நகைகள் இருந்ததை கண்டறிந்தார்.
இதனையடுத்து, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்துக்கு விரைந்த அவர் இன்ஸ்பெக்டர் தவமணியிடம் 10 சவரன் நகைகளை ஒப்படைத்தார். இதனையடுத்து, காணாமல் போன நகை தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகார்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதில், கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தேவி என்பவர் நகைகள் காணவில்லை என்ற புகார் கொடுத்தது தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகள் தேவியை முறையாக அழைத்து விசாரித்தனர். விசாரணையில், நேற்று காலை வடபழனி முருகன் கோவிலில் திருமணம் நடைபெற திட்டமிடப்படிருந்தது. இதனையொட்டி, மணப்பெண்ணான தேவியும், அவரது தாயும் வடபழனி முருகன் கோவிலுக்கு ஆட்டோவில் சென்றிருக்கின்றனர். அப்போது, தெருவோரம் இருந்த குப்பை தொட்டியில், குப்பைப்பையுடன் நகைபெட்டி வைத்திருந்த பையையும் தவறுதலாக போட்டுவிட்டு சென்றுள்ளனர்.
கொருக்குப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தவமணி, தேவியிடம் தவறவிட்ட 10 சவரன் நகைகளை ஒப்படைத்தார். இதையடுத்து இன்று சென்னை மாநகராட்சி காவல் ஆணையர் மகேஷ்குமார், மோகன சுந்தரத்தை அழைத்து அவரது நேர்மையை பாராட்டி பரிசு வழங்கினார். தூய்மை பணியாளர் மோகன சுந்தரத்தின் ஒப்பற்ற நேர்மையை பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.