Rahul Gandhi | ''ராகுல் ஜி.. யோசிச்சு பேசுங்க.. கொஞ்சம் வளருங்க'' - ராகுலுக்கு குஷ்புவின் ரிப்ளை!
ராகுல் பேச்சு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, இவர் எப்போதுதான் கற்றுக்கொள்ளப்போகிறார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முதல் சோஷியல் மீடியா வைரலாக உள்ளார் ராகுல்காந்தி. தமிழ்நாடு தொடர்பான இரண்டு வீடியோக்களால் வைரலானார் ராகுல். 2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த நிலையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரையில் நமது நாடு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பற்றி பேசவில்லை என்று குற்றம் சாட்டினார்.
மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, “ 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் நிலவுகிறது. நீட் தேர்வை விலக்க தமிழ்நாடு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் மத்திய அரசு அதனை நிராகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் தமிழ்நாடு மனம் தளராமல் அந்த கோரிக்கையை வைத்துக்கொண்டே இருக்கிறது. தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது. நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன்.” என்று பேசினார்.
இந்நிலையில் ராகுல்காந்தியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவையும், சிலர் எதிர்ப்பையும் பதிவிட்டு வருகின்றனர். ராகுல் பேச்சு தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு, இவர் எப்போதுதான் கற்றுக்கொள்ளப்போகிறார்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது ட்வீட்டில், '' இவர் எப்போதுதான் கற்றுக்கொள்வார்? தயவுசெய்து உண்மை என்னவென்பதை தெரிந்துகொள்ளுங்கள் ராகுல்காந்தி. புதுச்சேரியில் பாஜக அரசு தான் நடந்துகொண்டிருக்கிறது. அப்படியானால் தமிழக மக்கள் எங்களை நம்புகின்றனர் என்றுதான் அர்த்தம். தயவுசெய்து வளருங்கள். பேசுவதற்கு முன் யோசியுங்கள். நீங்கள் பேசும் ஒவ்வொரு முறையும் நீங்கள் தடுமாறுவதைப் பார்ப்பது மிகவும் துரதிர்ஷ்டவசமானது என பதிவிட்டுள்ளார்.
When will this man ever learn?? Pls get your facts right @RahulGandhi ji.
— KhushbuSundar or NakhatKhan (@khushsundar) February 2, 2022
It's #BJP Govt in Puducherry. It means tamil ppl have trusted us. Pls grow up, high time. Think before you speak. Very unfortunate to see you falter everytime you speak. @BJP4Indiahttps://t.co/qOKWRcOIqo
குஷ்புவின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். குஷ்பு சரியான விளக்கத்தை அளித்துள்ளதாக பாஜகவினர் குறிப்பிட்டுள்ளனர். புதுச்சேரியும் தமிழ்நாடு ஒன்றா? என்றும், புதுச்சேரியில் பாஜக ஆட்சி என்பதே நகைப்புக்குறியது என்றும் பல்வேறு தரப்பினர் எதிர்க்கருத்தை பதிவிட்டு வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்