(Source: ECI/ABP News/ABP Majha)
திருவண்ணாமலை : அண்ணாமலையார் கோவிலில் ஆரூத்ரா தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..
ஆருத்ரா தரிசனம்; ஆனந்த நடன நடராஜருக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நடந்த சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாதீப மை வைக்கப்பட்டு, பக்தர்கள் வெள்ளமென திரண்டு தரிசனம்
ஆனந்த நடனமாடும் நடராஜருக்கு சிவாலயங்களில் எழுந்தருளிய நடராஜருக்கு மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் திருமஞ்சனமும் மிகவும் சிறப்புக்குரியது. அதேபோன்று மார்கழி திருவாதிரையில் அருணோதய கால பூஜைகள் மற்றும் மாசி வளர்பிறை சதுர்த்தியில் சந்திகால பூஜை, சித்திரை திருவோணத்தில் மதியம் பூஜை, ஆனி உத்திரத்தில் சாயரட்சை பூஜை, ஆவணி வளர்பிறை சதுர்த்தி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்திகளில் அர்த்தஜாம பூஜை ஆகியவை நடராஜருக்கு மிகவும் விஷேசமானது. அதன்படி ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சாயரட்சை பூஜையில் சிறப்பு அபிஷேகமும், அலங்காரத்துடன் ஆனி திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் நினைத்தாலே முக்திதரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் அதிகாலையில் நடைகள் திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனைகள் நடைப்பெற்றது.
அதனைத்தொடர்ந்து, நேற்று நடராஜர் மற்றும் சிவகாமசுந்தரிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பின்னர் தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு நேற்று இரவு கோவிலில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து, இன்று அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக - ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து அதிகாலை 4.30 மணிக்கு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் பால்,தயிர், சந்தனம், பன்னீர்,உள்ளிட்ட சிறப்பு மூலிகைகளால் அபிஷேகம், நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு சிறப்பு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து காலை 9;30 மணிக்கு கோயில் சிவாச்சாரியார்கள் பல்வேறு சிறப்பு பூஜைகளை செய்து ஆருத்ரா தரிசன நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து 2668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலை உச்சியின் மீது தீபத் திருவிழாவின் போது ஏற்றப்பட்ட தீப கொப்பரையிலிருந்து பெறப்பட்ட தீப மையானது வைக்கப்பட்டது
மை, நடராஜருக்கும், சிவகாமி அம்பாளுக்கும் திலகமாக நெற்றியில் இடப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து எழுந்து அருளி ஆனந்த நடனமாடும் நடராஜரை ஆனந்த நடனமாடிவிட்டு, 5-ஆம் பிரகாரத்தில் வலம் வந்து, திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே வந்து மாட வீதிகளை வலம் வந்தது.
இந்த ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும், இன்று மார்கழி மாத பெளர்ணமி தினம் என்பதாலும் அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் 4 மணிநேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் துணை காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.