PM Modi: கால் வலிக்க காத்திருப்பு... மோடியை பார்த்துவிட்டுச் சென்ற தி.மு.க. மூதாட்டி..! என்னப்பா சொல்றீங்க..?
மூதாட்டி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்து மோடியை பார்த்து விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்தார்.
சென்னை வந்த பிரதமர் மோடி:
சென்னை விமான நிலைய பன்னாட்டு முனைய திறப்பு விழா, சென்னை - கோவை வந்தே பாரத் தொடக்க விழா, ராமகிருஷ்ணா மடத்தின் 125ஆவது ஆண்டு விழா ஆகியவற்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
இதனை அடுத்து பல்லாவரத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பல்லாவரம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட திமுக தொண்டர்கள் சூழ சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தி.மு.க. தொண்டரான மூதாட்டி:
பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாகவே முதலமைச்சர் அப்பகுதிக்கு வந்திருந்தார். அங்கிருந்து, முதலமைச்சர் கிளம்பிய உடனே அவரை வரவேற்புக்காக காத்திருந்த திமுக நிர்வாகிகள் மற்றும் திமுக தொண்டர்கள் அனைவரும் அங்கிருந்து உடனடியாக வீட்டிற்கு கிளம்பினர்.
ஆனால், திமுக சின்னமான உதயசூரியன் பொறித்த புடவையை அணிந்திருந்த 70 வயது மூதாட்டி ஒருவர் ஸ்டாலினின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, பிரதமர் மோடி எப்பொழுது வருவார்? அவரை பார்க்க வேண்டும் என காவல்துறையினரிடமும் அங்கிருந்த இளைஞர்கள் சிலரிடமும் கேள்வி எழுப்பி கொண்டு இருந்தார்.
மோடி வரும் வரை அங்கேயே காத்திருந்த மூதாட்டி அவரை பார்த்துவிட்டு மனமகிழ்ச்சியுடன் அங்கு இருந்து நகர்ந்தார். தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் ஏழாம் பொருத்தம் இருந்து வரும் நிலையில், மோடி வரும்பொழுது தி.மு.க. தொண்டர்கள் அங்கே இருக்கக்கூடாது என்ற உத்தரவின் அடிப்படையிலேயே அங்கிருந்து நிர்வாகிகள் நகர்ந்து சென்றதாக கூறப்படுகிறது.
"முதலமைச்சர் அய்யாவுடன் வராங்க இல்ல, கண்டிப்பா மோடியை பாக்கணும்"
ஆனால், மூதாட்டி ஒருவர் நீண்ட நேரம் காத்திருந்து மோடியை பார்த்து விட்டு சென்ற சம்பவம் அந்த பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து அந்த மூதாட்டியிடம் ஏபிபி நாடு நிருபர் இதுகுறித்து கேட்ட பொழுது, "முதலமைச்சர் அய்யாவுடன் மோடி வரார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும். நான் சிறு வயது முதலே தி.மு.க.வில் இருந்து வருகிறேன். பல முறை தி.மு.க.வில் பதவியில் கூட இருந்திருக்கிறேன். மோடி மற்றும் முதலமைச்சர் அய்யா ஆகிய இருவரை பார்த்தது மகிழ்ச்சி. நரேந்திர மோடியை பார்க்க வேண்டும் என ஆர்வத்துடன் இருந்தேன். பார்த்து விட்டேன்" என்றார்.
பல்லாவரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தாம்பரம் - செங்கோட்டை விரைவு ரயில் சேவையை தொடங்கி வைத்த மோடி, 37 கி.மீ. தூர திருத்துறைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பின்னர், மதுரை - செட்டிக்குளம் உயர்மட்ட பாலம், நத்தம் - துவரங்குறிச்சி 4 வழிச்சாலையையும் மோடி திறந்து வைத்துள்ளார். திருமங்கலம் - வடுகப்பட்டி - தெற்குவெங்கநல்லூர் இடையே 4 வழிச்சாலை திட்டத்திற்கு மோடி அடிக்கல் நாட்டினார்.