2016 TN Election | 2016 சட்டமன்ற தேர்தலில் மாற்றாக வந்து மாயமான கட்சிகள்..
2016 தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்று என வந்து அதில் சில கட்சிகள் படுதோல்வியை சந்தித்தன. சில கட்சிகளின் தலைவர்களே தோல்வியை தழுவிய நிலையில் , 2016ல் தலைவர்களுக்கும், கட்சிகளுக்கும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை விவரிக்கிறது ABP நாடு
2016 தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 16-ஆம் தேதி நடைபெற்றது. மே 19-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்தத் தேர்தலிலும் எப்போதும் போல, மிகப்பெரிய திராவிட கட்சிகளான திமுக, அதிமுகவுக்கும் இடையே பலத்த போட்டி நிலவியது. அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழ் மாநில முஸ்லீம் லீக், இந்திய தவ்ஹீத் ஜமாத், இந்திய குடியரசு கட்சி, கொங்கு பேரவை கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. அதிமுக கூட்டணியில் தொகுதி கிடைக்காததால் அதில் இருந்து மூவேந்தர் முன்னணி கழகம் விலகியது. தொகுதி உடன்பாடு எட்டப்படாததால், தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஏப்ரல் 10 அன்று கூட்டணியிலிருந்து விலகியது. கூட்டணியில் போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டன.
திமுக கூட்டணியில் தமிழக காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, சமூக சமத்துவப் படை, மக்கள் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரில், மூன்றாவது அணியாக இந்தத் தேர்தலில் களமிறங்கியது. வைகோ தலைமை தாங்கிய இந்த கூட்டணியில், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் இடம்பெற்றன. இந்தக் கூட்டணியுடன் தேதிமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார்.
பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இந்திய ஜனநாயக கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் போட்டியிட்டது. நாம் தமிழர், பாமக, எஸ்டிபிஐ, தமிழக வாழ்வுரிமை, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகள் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கை முடிவில், அதிமுக கூட்டணி 134 தொகுதிகளில் வென்று, மூன்றாவது முறையாக ஜெயலலிதா ஆட்சி அதிகாரத்தை பிடித்தார். திமுக கூட்டணி 98 தொகுதிகளை (திமுக 89, காங்கிரஸ் 8) கைப்பற்றி, வலுவான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்த்தை பெற்றது. 2016 தேர்தலில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மக்கள் நலக் கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. அந்தக் கூட்டணியில் உள்ள முக்கிய தலைவர்கள் திருமாவளவன், விஜயகாந்த் ஆகியோர் கூட தோல்வியைச் சந்தித்தனர். இதேபோல், ‘மாற்றம் முன்னேற்றம்’ என்ற முழக்கத்துடன் தனியாக களமிறங்கிய பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாசும் தோல்வியடைந்தார்.
முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதி அமோக வெற்றி
இந்தத் தேர்தலில், ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த முதல்வர் ஜெயலலிதா 39,545 வாக்குகள் வித்தியாசத்திலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி 68, 366 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர். கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் 37,730 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
அதிகம் எதிர்பார்க்கப்பட்டு தோல்வி அடைந்த தலைவர்கள்
2016 தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் மக்கள் நம்பியதாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. வந்த முடிவுகளோ வேறு. அதிலும், அந்த கூட்டணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அடைந்த தோல்விகள் அனைவருக்குமே அதிர்ச்சியை கொடுத்தது. முக்கியமாக விசிக தலைவர் திருமாவளவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அடைந்த தோல்விகள்.
திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், 2016 சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்டார். இவர், 48,363 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முருகுமாறன் 48,450 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் தோல்வியடைந்தார். இந்த தோல்வி, கட்சி உறுப்பினர்களைத் தவிர, சில கட்சி தலைவர்களுக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. மக்கள் நலக்கூட்டணியில் இணைந்ததே, இவர் தோல்விக்கு முக்கிய காரணம் என்று அரசியல் ஆர்வலர்கள் கணித்தனர்.
விஜயகாந்த்
மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட விஜயகாந்த் உளுந்தூர்ப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார். அவர் 27, 152 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். அதிமுக வேட்பாளர் குமரகுருவிடம் 47,496 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
அன்புமணி ராமதாஸ்
2016 தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அன்புமணி ராமதாஸ், பென்னாகரத்தில் போட்டியிட்டார். அங்கு 57,501 வாக்குகள் பெற்ற அன்புமணி, திமுக வேட்பாளர் இன்பசேகரனிடம் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்தியலிங்கம், வளர்மதி, கோகுல இந்திரா, பழனியப்பன் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வருவோம் என்று கூறி கவிழ்ந்த கட்சிகள்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வைகோ தலைமையிலான மக்கள் நலக் கூட்டணி பலமான கூட்டணியாக அமைந்தது. திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளை ஊழல் மிகுந்த கட்சி என்று கூறி, இரண்டு இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இணைந்து தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இந்த கூட்டணியில் விஜயகாந்தின் தேமுதிகவும், ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்து தமிழ்நாட்டில் மாற்றத்தை கொண்டு வருவோம் என்றனர். ஆனால், மக்கள் அளித்த தீர்ப்போ வேறுமாதிரியாக இருந்தது.
தேமுதிக
தேமுதிக மட்டும் போட்டியிட்ட தொகுதிகளில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்கு பெற்ற தொகுதிகள் 7 மட்டுமே. 112 தொகுதிகளில் 3-வது இடமும், 105 தொகுதிகளில் 4-வது இடமும் பெற்றுள்ளது. 103 தொகுதியில் நின்று தேமுதிக சராசரியாக 10042.56 வாக்கு பெற்றுள்ளது.
பாமக
பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, எடப்பாடி, ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளில் பாமக 2-ஆம் இடத்தைப் பிடித்தது. 68 தொகுதிகளில் 3-வது இடமும், 100 தொகுதிகளில் 5-வது இடத்திற்கும் கீழே சென்றது. 10 தொகுதிகளில் 20% மேல் வாக்குகள் பெற்றது. மேலும் 33 தொகுதிகளில் 10% மேல் வாக்குப் பெற்றது. 122 தொகுதிகளில் 2% குறைவாக வாக்குப் பெற்றது. மதிமுக சார்பில் வைகோ போட்டியிடவில்லை. ஆனால், அந்தக்கட்சி 28 தொகுதிகளில் போட்டியிட்டன. அதில், ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. மொத்தம் பெற்ற வாக்குகள் - 3,73,713. விசிக 25 தொகுதிகளில் போட்டியிட்டு 3,31,849 வாக்குகள் பெற்றன.