தஞ்சையில் 16 வயது சிறுவன் வாக்களிக்க வாய்ப்பளித்த அதிகாரிகள்
தஞ்சை மாவட்டத்தில் பூத் சிலிப்பு வழங்கப்பட்டு 16 வயது சிறுவன் வாக்களித்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தொகுதிக்குட்பட்ட அரசூர் பகுதியில் அமைந்துள்ள 164 வாக்குச்சாவடி மையத்தில், இளைஞர் (பெயர் குறிப்பிடப்படவில்லை) ஒருவர் வாக்களித்துவிட்டு சென்றுள்ளார்.
பின்னர், அதே பெயர் கொண்ட இளைஞர் வாக்களிக்க வந்தபோது அவரது வாக்கு ஏற்கனவே பதிவாகிவிட்டதாக வாக்குச் சாவடியில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இளைஞர் இதுகுறித்து அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் வந்து வாக்களித்துவிட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இருவருக்கும் ஒரே பெயர் மற்றும் தந்தை பெயரும் ஒன்றாக இருந்துள்ளது. மேலும், பூத்து சிலிப்பினை சம்பந்தப்பட்ட இளைஞரிடம் வழங்காமல், 16 வயது சிறுவனுக்கு வழங்கப்பட்டதாலும், சிறுவனும் தனக்கு பூத்சிலிப்பு வழங்கியதால் ஆர்வத்துடன் வாக்களித்துவிட்டு சென்றதாலும் இந்த குளறுபடி ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விசாரணை செய்து, பாதிக்கப்பட்ட இளைஞருக்கு மாலை 5 மணிக்கு மேல் வாக்களிக்க மாற்று ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
இதேபோல் அதே பகுதியை சேர்ந்த அஞ்சம்மாள் என்ற ஒரே பெயர் கொண்ட இரண்டு மூதாட்டிகள் தங்களுடைய வாக்குகளை மாற்றி செலுத்திவிட்டதால் சிறிது குழப்பம் ஏற்பட்டது.