'10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு' : சென்னை வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ வெப்பச்சலனம் காரணமாகவும், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாகவும், கோவா, கர்நாடக கடலோர பகுதி முதல் தென்தமிழ்நாடு வரை வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இன்று விருதுநகர், மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சை, திருச்சி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
தமிழ்நாட்டின் ஒரு சில வட உள்மாவட்டங்களில் நாளை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். நாளை மறுநாள் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கும்.
உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழ்நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் 12 செ.மீ. மழையும், புதுக்கோட்டை காரையூரில் 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக தேனி மாவட்டம் பெரியாறு மற்றும் தளியில் தலா 4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இன்று கேரளா, கர்நாடக கடலோரப்பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். வரும் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்குறிப்பிட்ட தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று தஞ்சை, திருச்சி, பெரம்பலூர், வாணியம்பாடி, விருதுநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : உலக சுற்றுச்சூழல் தினம்: தமிழ்நாடு சந்திக்கும் முக்கிய பிரச்சனைகள் என்ன?