(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழக அரசு கலைப்பா? யோசித்துதான் பார்க்கட்டுமே- எல்.முருகனுக்கு உதயநிதி பதில்!
மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியில் உள்ள ஒன்பது ஆண்டுகளில் எந்த மாநில அரசையும் கலைத்ததில்லை.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு அரசு மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக இளைஞர் நலன் விளையாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்டங்கள் அமலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி நேற்று இரவு வந்தார்.
காலையில் இளைஞர் அணி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் தொடர்ந்து நெல்லை சந்திப்பு பகுதியில் நடைபெற்று வரும் பெரியார் பேருந்து நிலைய பணிகளை பார்வையிட்டார். குறிப்பாக கடந்த 2017 ஆம் ஆண்டு பேருந்து நிலைய பணிகள் துவங்கிய நிலையில் 6 ஆண்டுகள் கடந்தும் பேருந்து நிலைய பணிகள் முழுமையாக நிறைவு பெறாத நிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.
தொடர்ந்து அமைச்சர் உதயநிதி செய்தியாளர்களிடம் பேசுகையில், ’’நெல்லையில் பெரியார் பேருந்து நிலையம் 87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு 2017 இல் துவங்கப்பட்டது. அதன் பின் நீதிமன்ற வழக்கு காரணமாக பேருந்து நிலைய கட்டிடப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. தற்போது திமுக ஆட்சி அமைந்ததும் 90% பணிகள் நிறைவடைந்துள்ளது. வரும் நவம்பர் 30ஆம் தேதிக்குள் முழுமையாக பணிகள் நிறைவு பெறும். டிசம்பர் மாதத்தில் தமிழக முதலமைச்சர் காணொலி காட்சி மூலமாக பேருந்து நிலையத்தை திறந்து வைப்பார்’’ என்று தெரிவித்தார்.
மேலும் பாழாகி வரும் சர்வதேச தரத்திலான நீச்சல் குளத்தை அமைச்சர் ஆய்வு செய்தார். அது குறித்த கேள்விக்கு 10 லட்சம் ரூபாய் நிதி புனரமைப்பு செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார்.
’’மோடி தலைமையிலான மத்திய அரசு, ஆட்சியில் உள்ள ஒன்பது ஆண்டுகளில் எந்த மாநில அரசையும் கலைத்ததில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போய் ஆளுநருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழக அரசை கலைக்கும் யோசனை இல்லை’’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி அளித்திருந்தது குறித்த கேள்விக்கு, ’’யோசித்துதான் பார்க்கட்டுமே, யோசித்துதான் பார்க்கட்டுமே’’ என தெரிவித்தார். தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக அவர் தெரிவித்தார்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்