எம்பி எஸ்.ஆர்.பார்த்திபனின் சர்ச்சைக்குரிய பதிவு - சேலம் திமுகவினர் இடையே பரபரப்பு
சேலம் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் சமூக வலைதளங்கள் மூலமாக கருத்து பதிவு.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, சூரமங்கலம் மற்றும் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில் சேலம் மாநகராட்சியின் தூய்மை பணியாளர்கள் 2160 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டது. இதற்கு, சேலம் நாடாளுமன்ற உறுப்பினராகிய எனக்கு உரிய அழைப்பு வழங்கப்படவில்லை என தனது ஆதங்கத்தை சமூக வலைதளத்தில் வெளிப்படுத்தி கருத்துக்களை பதிவிட்டுள்ளார் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன்.
இதில், ‘எனக்கு சுயமரியாதை உயிருக்கும் மேலானது, அரசு நிகழ்ச்சிகளுக்கு சேலம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அழைப்பு கொடுக்கக் கூடாது. அதை மீறி அதிகாரிகள் அழைப்பு கொடுத்தால் அதிகாரிகள் மிரட்டப்படுகிறார்கள். ஊழல் இல்லாத நேர்மையான என் செயல்பாடுகளை சேலம் மக்கள் கட்சித் தோழர்கள், நிர்வாகிகள் நன்கு அறிவார்கள்’ என்று கருத்து பதிவிட்டுள்ளார். மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மக்கள் பணிகளை செய்யவிடாமல் தடுப்பது சட்ட விரோதமானது. சேலம் மாநகராட்சி ஆணையாளர் நான் ஏதோ எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்று நினைக்கிறார் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மாநகராட்சிக்கு நடக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து என்னை புறக்கணிக்கிறார்கள். என்னை புறக்கணிப்பது எனக்கு வாக்களித்த 20 லட்சம் மக்களையும் புறப்பணிப்பதற்கு சமம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதை தொடர்ந்து பதிவில், நான் போராட்டக்காரன் என்பதை அனைவரும் அறிந்த ஒன்று. இதை சம்பந்தப்பட்டவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன் எனவும் கருத்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி, சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிறிஸ்துராஜ் ஆகியோர் சேலம் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலைகள் வழங்கிய புகைப்படம் இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த பதிவு சிறிது நேரத்தில் அனைத்து சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. பின்னர் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபனின் ட்விட்டர் கணக்கில், சேலம் மாநகராட்சியில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அழைப்பு தெரிவிக்கப்படும் என்பதனை வரவேற்கிறேன் நன்றி எனவும், சேலம் மாநகராட்சி கமிஷனர் அவர்கள் சிறப்பாக செயல்படக் கூடியவர். எல்லோருடைய நோக்கமும் மக்களுக்கு சிறந்த சேவையை கொடுப்பதுதான். மேலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் வழியில் சிறப்பாக பணியாற்றுவோம் என்று பதிவிட்டார்.
கடந்த சில நாட்களாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் பல இடங்களுக்கு தனியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிவது மற்றும் அரசு பள்ளிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து உதவுவது போன்ற காரியங்களில் ஈடுபட்டு வருகிறார். சேலம் மாவட்டத்தில் திமுகவில் உள்ள கட்சி விவகாரம் தற்போது பூதாகரமாகியுள்ளது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள கருத்தின் மூலமாக வெளிவந்துள்ளது. இந்த கருத்து பதிவு சேலம் திமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.