மதுரையில் நடைபெற்ற அரசு புத்தகத் திருவிழாவில் மேடையில் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டபோது, பள்ளி மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 



 

Madurai Book Fair 2024: வரலாற்று பெருமைமிக்க மதுரையின் அடையாளமாக திகழும் தமுக்கம் மைதானத்தில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடைபெறும். தென் மாவட்ட மக்களுக்கு மையமாக கருதப்படும் மதுரையில், நடத்தப்படும் புத்தக திருவிழாவிற்கு இலட்சக்கணக்கான வாசகர்கள் வந்து செல்வார்கள். இந்நிலையில் இந்தாண்டு புத்தக திருவிழா துவங்கியது. 


மதுரை மாவட்ட நிர்வாகம்

 

மதுரை மாவட்டத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக ப.பா.சி. ஒருங்கிணைப்பில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், நடப்பாண்டிற்கான புத்தக திருவிழா மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

புத்தக திருவிழாவில் சாமியாடிய பள்ளி மாணவிகள்

 

மதுரை தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் புத்தக கண்காட்சி இன்று தொடங்கியது. தொடக்க நிகழ்ச்சியாக கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி மாவட்ட ஆட்சியர் சங்கீதா,  மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் மேயர் இந்திராணி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதனையடுத்து நடைபெற்ற தொடக்க விழா நிகழ்ச்சியில் மேடையில் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட கலந்துகொண்டு உரையாற்றினர். பின்னர்  சிறிது நேரத்தில் தொடக்க விழா நிகழ்வாக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அப்போது பக்தி பாடல் இடம் பெற்று ஒளிபரப்பப்பட்டு கலைஞர்கள் ஆடிக் கொண்டிருந்தபோது,  மேடைக்கு கீழ் அமர்ந்திருந்த பள்ளி மாணவிகள் பக்தி பாடல்கள் ஒளிபரப்பப்பட்டதால் அதனைக் கேட்டு சாமியாட தொடங்கினர்.

 

கலை நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது

 

அப்போது சில மாணவிகள் மயங்கி விழுந்த போது அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு முகத்தில் தண்ணீர் தெளித்து இருக்கையில்  அமர வைத்தனர். அப்போது அங்கு இருந்த சிலர் இது போன்ற அரசின் நிகழ்ச்சியில் பக்தி பாடல் போட்டது ஏன் கேள்விகேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதனையடுத்து கலை நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டு அனைவரும் புறப்பட்டு சென்றனர். அரசு நிகழ்ச்சியில் பக்தி பாடல் ஒளிபரப்பப்பட்டு அதில் மாணவிகள் சாமியாடி மயங்கி விழுந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது