தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் வாசலில் பெரும் சத்தத்துடன் வெடி வெடித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னணி இதுதாங்க.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பம்பப்படையூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவில், உடையாளூர் கிராமம், கும்பகோணம் வட்டார போக்குவரத்து அலுவலகம், அரசு ஆஸ்பத்திரி, தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஆகியவை இயங்கி வருகிறது. இதனால் இந்த பகுதி எப்போதும் போக்குவரத்து நிறைந்து காணப்படும்.

இப்பகுதி வழியாக தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சென்று வருகின்றனர். இருசக்கர வாகனங்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், போக்குவரத்து வாகனங்கள் சென்று வருகின்றன. மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த சாலையில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அருகே டமார் என்று பெரிய அளவில் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பகுதியை சேர்ந்த மக்கள் உடன் பட்டீஸ்வரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெடி வெடித்த சப்தம் போல் இருந்தது என்று பொதுமக்கள் கூறியதால் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் சணல் போன்ற ஒன்று எரிந்த நிலையில் காணப்பட்டது., உடன் அதனை போலீசார் ஆய்வுக்காக எடுத்து சென்றனர். மேலும் அந்த சிதறிக்கிடந்த தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், பம்பப்படையூர் பகுதியில் நேற்று முன்தினம் சில விசேஷ நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. அப்போது அப்பகுதியில் வெடி வெடித்துள்ளனர். இதில் சில வெடிகள் வெடித்த நிலையில் ஒன்று மட்டும் வெடிக்காமல் இருந்துள்ளது. இது வெங்காய வெடி போன்ற ஒன்றாகும். சணலால் இறுக்கமாக கட்டப்பட்ட ஒன்றுதான். நேற்று காலை சுமார் 8.30 மணிக்கு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் தனது உறவினருடன் பணம் எடுக்க வந்துள்ளார். உறவினர் ஏடிஎம் உள்ளே சென்றுள்ளார். வெளியில் நின்ற அந்த நபர் பேப்பரில் சுற்றி காணப்பட்ட இந்த பொருளை எடுத்து பார்த்துள்ளார். சணலுடன் காணப்பட்டதால் அச்சத்துடன் வீசி எறிந்த பொழுது அந்த வெடி தரையில் மோதி வெடித்துள்ளது. இது வெங்காய வெடி போன்ற ஒன்றாகும். இது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஆய்வுக்காக எடுத்துச் சென்ற வெடித்த பொருட்கள் குறித்து தகவல் வந்தவுடன் முழுமையாக தெரிய வரும் என்றனர்.

பொட்டலம் போன்று கீழே கிடக்கும்  பொருட்களை எடுப்பதோ, பிரித்து பார்ப்பதோ கூடாது என்று பலமுறை போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். ஆனால் பொதுமக்கள் இதுகுறித்து விழிப்புணர்வு அடைவதில்லை. எனவே இனியும் இதுபோன்று செய்யாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.