Chennai Airport Metro: தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்களின் சேவை  நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. இதனால், விமான நிலையம் செல்ல முடியாமல் மெட்ரோ ரயில் பயணிகள் தவித்து வருகின்றனர். இருப்பினும், விம்கோ நகர் டிப்போவில் இருந்து மீனம்பாக்கம் வரை செல்லும் மெட்ரோ ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மெட்ரோ ரயில் திட்டம்:

வளர்ந்து வரும் மக்கள் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயிலின் முதற்கட்டமாக இரண்டு வழிப்பாதைகள் அமைக்கப்பட்டன. வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரை 23.085 கி.மீ. தூரத்திற்கு Blue Line என்ற வழிப்பாதையும் சென்னை சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை 21.961 கி.மீ. தூரத்திற்கு Green Line எனப்படும் வழிப்பாதையும் அமைக்கப்பட்டு, தற்போது பயன்பாட்டில் இருந்து வருகிறது.

அதிகரித்து வரும் மக்கள் தேவையை பூர்த்தி செய்வதற்காக, கடந்த 2023 ஆம் ஆண்டில், 2,820.9 கோடி ரூபாய்க்கு ஆறு பெட்டிகள் கொண்ட 28 ரயில்களை வாங்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தது. சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை 15.3 கி.மீ தூரத்திற்கு முன்மொழியப்பட்ட திட்டம் தற்போது பரிசீலனையில் உள்ளது. விரைவில், விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களின் நாடித்துடிப்பாக மாறிய மெட்ரோ:

மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தாண்டு, தோராயமாக ஒரு நாளைக்கு 3 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி வருவதாக தரவுகள் கூறுகின்றன. 

கடந்த ஜனவரி மாதம், ஒரு நாளைக்கு 2.90 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தி இருக்கின்றனர். பிப்ரவரி மாதம், இந்த எண்ணிக்கை 3 லட்சமாக உயர்ந்துள்ளது.

விமான நிலையம் செல்ல முடியாமல் தவிக்கும் பயணிகள்:

இந்த நிலையில், விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் அறிவித்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில்களின் சேவை  நிறுத்தப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக, விமான நிலையத்திற்கு செல்ல முடியாமல் மெட்ரோ ரயில் பயணிகள் தவித்து வருகின்றனர். இருந்தபோதிலும், விம்கோ நகர் டிப்போவில் இருந்து மீனம்பாக்கம் வரை செல்லும் மெட்ரோ ரயில்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.