பார்வை குறைபாடு காரணமாக படிப்பதற்கு கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இனி, சொட்டு மருந்து மூலம் அதற்கு தீர்வு காணப்பட உள்ளது.


அறிவியலின் புது உச்சம்: உலகின் பல பிரச்னைகளுக்கு அறிவியல் தீர்வை தந்துள்ளது. குறிப்பாக, மருத்துவ துறையில் அடைந்துள்ள முன்னேற்றம் நம்மை வியக்க வைக்கிறது. உலகின் உயிர்கொல்லி நோய்களில் ஒன்றான புற்று நோய் முதல் உலகையே புரட்டிப்போட்ட கொரோனா வரை அனைத்தையும் விஞ்ஞான உலகம் கட்டுப்படுத்தியுள்ளது. 


இந்த நிலையில், வெள்ளெழுத்து (presbyopia) பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் புதிய சொட்டு மருந்து கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு, மருந்து பொருள்கள் கட்டுப்பாட்டு இயக்குநரகம் (DCGI) தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.


PresVu என்ற அந்த சொட்டு மருந்தை என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு, மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பின் பொருள் நிபுணர் குழு (CDSCO), ஏற்கனவே ஒப்புதல் அளித்துவிட்டது.  


வெள்ளெழுத்து (presbyopia) பார்வை குறைபாடால் பாதிக்கப்பட்டு படிக்கும்போது கண்ணாடிகளை பயன்படுத்துவோருக்கு இது புதிய விடியலை தந்துள்ளது. 


presbyopia என்றால் என்ன?


வயது முதிர்வு காரணமாக அருகில் இருப்பதை பார்ப்பதில் சிரமம் ஏற்படும். இதனை வெள்ளெழுத்து (presbyopia) என்கிறார்கள். பொதுவாக, 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். உலகளவில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பிரஸ்பியோபியாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


வெள்ளெழுத்து என்பது வயதானவுடன் இயற்கையாகவே ஏற்படுகிறது. ஏனெனில், வயதாக வயதாக கண்களின் பார்வை திறன் குறைகிறது. இந்த குறைபாடு, ஒருவரின் வாழ்க்கைத் தரத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அன்றாட பணிகளைச் செய்வதிலும் அவர்களின் வாழ்க்கை முறையைப் பராமரிக்கும் திறனையும் இது பாதிக்கிறது. 


PresVu சொட்டு மருந்து குறித்து பேசியுள்ள என்டோட் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நிகில் கே. மசூர்கர், "பல வருட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் மூலம் PresVu சொட்டு மருந்து உருவாக்கப்பட்டது. DCGI ஒப்புதல் அளித்திருப்பது, இந்தியாவில் கண் சிகிச்சையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வதில் முக்கிய படியாகும்.


PresVu என்பது மருந்து மட்டும் அல்ல. இது லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை சிறப்பாகக் காண உதவுவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் ஒரு தீர்வாகும்" என்றார்.