Pondicherry University New Programmes: கடந்த 1985-ம் ஆண்டில் நிறுவப்பட்ட புதுச்சேரி பல்கலைக்கழகம் பல்துறை உயர்கல்வி மையமாக திகழ்கிறது. இது,15 பள்ளிகள், 41 துறைகள், 9 மையங்கள், 2 தொலைதூர கல்வி வளாகங்கள் (காரைக்கால் மற்றும் ஸ்ரீ விஜயபுரம்), 2 உறுப்பு கல்லூரிகள் மற்றும் புதுச்சேரி, அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களிலுள்ள 119 இணைப்பு கல்லூரிகளை உள்ளடக்கியதாக உள்ளது.
பல தலைசிறந்த முன்னாள் மாணவர்களின் பிறப்பிடமாகவும் சர்வதேச அளவில் முன்னணி விஞ்ஞானிகளாக உள்ள பல புகழ்பெற்ற ஆசிரியர்களின் இருப்பிடமாகவும் இந்தப் பல்கலைக்கழகம் திகழ்கிறது.
1. கல்வித் திட்டங்கள்:
1. தற்போது வழங்கப்படும் கல்வித் திட்டங்கள்:
- முனைவர் பட்டம் (PhD) – 52
- முதுகலை (PG) – 65
- இளங்கலை (UG) – 33
- 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை – 2
- முதுகலைப் பட்டயப் படிப்பு– 5
தற்போது இப்பல்கலைக்கழகத்தில் 9,403 மாணவர்கள் படித்து வருகின்றனர். 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நாட்டின் தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ பின்பற்றி வரும் பல்கலைகழகங்களில் புதுச்சேரி பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.
- இந்தப் பல்கலைக்கழகத்தில் தற்போது புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான 36 இளங்கலை பட்டப்படிப்புகளும் இதனுடன் இணைந்த கல்லூரிகளில் 47 பட்டப் படிப்புகளும் உள்ளன. இதில் சுமார் 23,500 மாணவர்கள் படித்து வருகின்றனர்.
2. 2025-26-ம் கல்வியாண்டிற்கான புதிய கல்வித் திட்டங்கள்:
- முதுகலை காட்சிக் கலை (Master of Visual Arts)
- முதுகலை அறிவியல் (அளவுசார் நிதி) - M.Sc. (Quantitative Finance)
- இளங்கலை பொறியியல் (சுற்றுச்சூழல் பொறியியல்) - B.Tech. (Environmental Engineering)
- இளங்கலை அறிவியல் (உளவியல்) - B.Sc. (Hons.) (Psychology)
- இளங்கலை அறிவியல் (நிலைத்தன்மை மற்றும் பருவ நிலை மாற்றம்) - B.Sc. (Hons.) (Sustainability and Climate Change)
- இளங்கலை அறிவியல் (உயிர்தகவலியல்) - B.Sc. (Hons.) (Bioinformatics)
மாணவர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, இந்தப் பல்கலைக்கழகம் பாரம்பரியமான முறையிலான வளர்ச்சித் திட்டத்தை வகுத்துள்ளது. அதில், கல்விச் சேவை குறைவாக உள்ள பகுதிகளில் சமுதாயக் கல்லூரி மாதிரியை விரிவுபடுத்துதல், சர்வதேச கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இணையான மற்றும் இரட்டைப் பட்டப் படிப்புகள் வழங்குதல், தொழில்நுட்பம் மூலம் இயக்கப்படும் ஆன்லைன் மற்றும் தொலைதூர கல்வியை ஊக்குவித்தல் மற்றும் 2030-ம் ஆண்டிற்குள் பூஜ்ய கார்பன் உமிழ்வு கொண்ட வளாகத்தை அமைக்கும் வகையில் சூழலியல் நிலைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு முயற்சிகளை மேம்படுத்துதல் ஆகியவை அடங்கும்.
3. அந்தமான் கேம்பஸில் உள்கட்டமைப்பு மேம்பாடு:
புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் அந்தமான் கேம்பஸ் ரூ. 14.80 கோடி செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இது, ஆறு மாதங்களுக்குள் நிறைவடைய உள்ளது. இந்திய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம் (NIOT), அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கடல் உயிரியல் பாடநெறிக்கான பெல்லோஷிப் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ரூ. 4.20 கோடியை ஒதுக்கியுள்ளது.
4. சர்வதேச பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்த புதுச்சேரி பல்கலைக்கழகம்:
49 சர்வதேச புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் 63 தேசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (இன்றுவரை மொத்தம் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்) கையெழுத்தாகி இருக்கின்றன.
பிரான்சின் பாரிஸ் - 1 பாந்தியன் - சோர்போன் பல்கலைக்கழகத்துடன் பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் மேற்கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் வழங்கப்படும் 5 ஆண்டு, இரட்டைப் பட்டப்படிப்பு திட்டமே MA (S.E.A.L.) ஆகும்.
இங்கு படிக்கும் மாணவர்கள், தங்கள் 3 ஆம் ஆண்டு படிப்பை பார்ட்னர் பல்கலைக்கழகத்தில் (பாரிஸ் - 1 பாந்தியன் - சோர்போன் பல்கலைக்கழகம்) படிக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2020-25) மாணவர்/ஆசிரியர் பரிமாற்றம்
மாணவர் பரிமாற்றம் (வெளியேறும் - 123; உள்வரும் - 39)
ஆசிரியர் பரிமாற்றம் (வெளியேறும் - 15; உள்வரும் - 10)
அண்மையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்திற்கு A+ தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதன் மேன்மையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.