பள்ளி மாணவர்கள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான உறுதிமொழி எடுப்பது குறித்த சுற்றறிக்கையால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.


திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் சார்பில், பள்ளி ஆசிரியர்களுக்கு அண்மையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அதில் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாடுவது குறித்த உறுதிமொழிகள் இருந்தது சர்ச்சை எழுந்துள்ளது. அந்த அறிக்கையில், 'பாதுகாப்பான முறையில், பிளாஸ்டிக் இல்லாமல் விநாயகர் சதுர்ச்சி கொண்டாடுவேன்' என்று உறுதிமொழி எடுக்க வலியுறுத்தப்பட்டு இருந்தது. இது சர்ச்சைகளைக் கிளப்பியது.


மாணவர்கள் பள்ளியில் உறுதிமொழி


நாடு முழுவதும் செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், பள்ளியில் பாதுகாப்பான முறையில், சூழலுக்கு உகந்த வகையில் கொண்டாடுவேன் என்று மாணவர்கள் பள்ளியில் உறுதிமொழி எடுக்க வேண்டும் எனவும் அதைப் புகைப்படம் எடுத்தும் அனுப்பவும் வலியுறுத்தப்பட்டு இருந்தது.


சூழலுக்கு உகந்த பூக்கள், இலைகள் மற்றும் பொருட்களை பூஜைக்கு பயன்படுத்துவோம்.


விநாயகர் சிலைகளை தமிழ அரசு அறிவித்த இட்னக்களில் மட்டுமே கரைப்போம்.


ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளைத் தவிர்ப்போம்.


ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் சிலைகளை தவிர்ப்போம்.


விழா முடிந்தவுடன் குப்பைகளை உரிய இடத்தில் போடுவோம் என்பன உள்ளிட்ட உறுதிமொழிகள் அதில் கூறப்பட்டு இருந்தன. அரசு விழாவாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படாத நிலையில், இது பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியது. 


பள்ளிக் கல்வித்துறை விளக்கம்


இந்த நிலையில், பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்தில் இதுகுறித்து விளக்கம் கேட்டபோது, ''சம்பந்தப்பட்ட ஆட்சியர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அறிக்கை அடிப்படையில் ஆட்சியர்களின் அறிவுறுத்தல் அடிப்படையில் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதற்கும் பள்ளிக் கல்வித்துறைக்கும் நேரடியாக எந்த சம்பந்தமும் இல்லை'' என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.  


ALSO READ | Vinayagar Chathurthi: கஷ்டங்கள் தீரணுமா? விநாயகர் சதுர்த்தி பூஜையில் இடம்பெறவேண்டிய 21 இலைகள் இதுதான்!