சுவாசிக்க முடியாமல் திணறும் கிரிக்கெட் வீரர்கள்.. உலகக்கோப்பையை உலுக்கி எடுக்கும் காற்று மாசு
இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு குறித்த புகார்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பதில் அளிக்கவில்லை.
இந்தியாவின் முக்கிய நகரங்கள், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாறி வருகின்றன. உலகளவில் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்பட்ட முதல் 10 நகரங்களின் பட்டியலில் டெல்லி, மும்பை, கொல்கத்தா ஆகியவை இடம்பெற்றுள்ளது. உலக கோப்பை போட்டிகள் நடந்து வரும் நகரங்களில் கடந்த சில வாரங்களாகவே காற்றின் தரம் மோசமான நிலையில் உள்ளதாக IQAir தகவல் வெளியிட்டுள்ளது.
இந்திய நகரங்களில் நிலவி வரும் மோசமான புகை மூட்டம் குறித்து உலக கிரிக்கெட் வீரர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். மூச்சுத்திணறல் ஏற்படும் சூழலில் ஆட்டத்தை விளையாடி வருவதாக கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகக்கோப்பையை உலுக்கி எடுக்கும் காற்று மாசு:
நேற்று முன்தினம், டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வங்கதேச, இலங்கை அணிகள் மோதின. போட்டி நடைபெறுவதற்கு முன்னதாக, மைதானத்தில் வீரர்கள் பயற்சி எடுக்க திட்டமிடப்பட்டது. ஆனால், நடைபெறவிருந்த பயிற்சி காற்று மாசு காரணமாக ரத்து செய்யப்பட்டது. மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட சில வீரர்கள் தங்களுடைய ஹோட்டலில் தங்கினர்.
உலகளவில் காற்று மாசால் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமாக டெல்லி பட்டியலிடப்பட்டபோதிலும், அங்கு போட்டி திட்டமிட்டப்படி நடத்தப்பட்டது. உடல்களில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் நச்சுத்தன்மை வாய்ந்த புகை மூட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகியுள்ளது.
வரும் 2036ஆம் ஆண்டு, இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த பிரதமர் மோடி, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு பெரும் தடைக்கலாக மாறியுள்ளது.
புகார் கூறும் டாப் கிரிக்கெட் வீரர்கள்:
கடந்த வாரம், செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, தனது சொந்த நகரமான மும்பையில் நிலவும் மாசு அளவு குறித்து அதிர்ச்சி தெரிவித்திருந்தார். காற்றின் மாசு உகந்ததாக இல்லை என இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பு அவர் கவலை தெரிவித்திருந்தார்.
கடந்த மாதம், பெங்களூரு மைதானத்தில் நடந்த பயிற்சியின் போது, இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், சுவாசிப்பதற்கு இன்ஹேலரை பயன்படுத்திய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானது.
காற்று மாசு தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய இங்கிலாந்து அணியின் மூத்த வீரர் ஜோ ரூட், "மும்பையில் விளையாடுவது காற்றை உட்கொள்வது போல இருக்கிறது. மூச்சு விட முடியாத நிலை இருந்தது போல தோன்றியது. இது வேறு எங்கும் நடந்தது இல்லை" என்றார்.
இந்தியாவில் நிலவி வரும் காற்று மாசு குறித்த புகார்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் பதில் அளிக்கவில்லை.