ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு ரயில் வசதி! எந்தெந்த வழித்தடங்களில் தெரியுமா?
சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக கோட்டயம், செங்கண்ணூர், எர்ணாகுளம் ரயில் நிலையங்களில் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு சலுகைகள் திட்டங்களை கொண்டு வருகிறது. குறிப்பாக தொலைதூரம் பயணிப்பவர்களுக்கு, ரயில் சேவை வரப்பிரசாதமாக இருந்து வருகிறது.
இந்திய ரயில்வே நாள்தோறும் 19,000 ரயில்களை இயக்கி வருகிறது. இதில் நாள்தோறும் 4 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். ரயில் பயணிகளுக்காக அவ்வப்போது பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது ரயில்வே நிர்வாகம். இந்த நிலையில் தற்போது சபரிமலை சீசனையொட்டி பக்தர்களின் வசதிக்காக 204 சிறப்பு ரயில் சேவைகளை தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோட்டயம், செங்கண்ணூர், எர்ணாகுளம் ரயில் நிலையங்களில் தங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே ஏற்பாடுகளைச் செய்துள்ளது. நெரிசலைத் தவிர்க்க, அதிக அளவில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னை - கொல்லம், திருவனந்தபுரம் - மங்களூரு, பன்வெல் - கோட்டயம், விசாகப்பட்டினம் - கொல்லம், ஹைதராபாத் - கொல்லம், விஜயவாடா - கோட்டயம் ஆகிய வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. நவ.23-ம் தேதி 204 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் பல ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
பக்தர்கள் அதிகம் வந்து செல்லும் கோட்டயம், செங்கண்ணூர், எர்ணாகுளம் ரயில் நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கோட்டயத்தின் பிரதான நுழைவாயில் அருகே 900 பக்தர்கள் தங்கும் வகையில் 20 கழிப்பறைகள், குளியலறைகள், உடைமைகள் வைக்கும் அறை, உணவருந்தும் கூடங்கள், செல்போன் சார்ஜிங் வசதிகளுடன் 3 மாடி பக்தர்கள் சேவை மையம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செங்கண்ணூரில் 600 பயணிகள் தங்கும் வகையில் 3 விசாலமான தங்குமிடங்கள், புதிய சைவ உணவகம் அமைக்கப்பட்டுள்ளன. எர்ணாகுளம் சந்திப்பு நிலையத்தில் ஏசி காத்திருப்பு அறைகள், ஓய்வறைகள், உணவகங்கள், தற்காலிக கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கோட்டயம், செங்கண்ணூர் ரயில் நிலையங்களில் ஆர்பிஎஃப் போலீஸாரின் உதவி மையங்கள், கூடுதல் டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. பக்தர்களுக்கு உதவ தமிழ், தெலுங்கு, கன்னடம் தெரிந்த ரயில்வே ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பெண் காவலர்கள் உள்பட கூடுதல் ஆர்பிஎஃப் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















