சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை
சோலார் பேனல் மோசடி வழக்கில், இரண்டாவது குற்றவாளியான சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டடது. முதல் குற்றவாளியான பீஜு ராதா கிருஷ்ணன் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.
சோலார் பேனல் மோசடி வழக்கில், செக் மோசடி குற்றச்சாட்டில் சரிதா நாயருக்கு 6 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து கோழிகோடு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சோலார் சிஸ்டம் என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தவர் சரிதா நாயர். இவரும், பிஜூ ராதா கிருஷ்ணன் என்பவரும் தன்னிடம் 42 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செக் மோசடி செய்ததாக கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் மஜீத் என்பவர் கோழிக்கோடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த 23ஆம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வரவிருந்தது. ஆனால், சரிதா நாயர் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் நீதிமன்றம் பல முறையும் சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் சரிதா நாயர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இரண்டாவது குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கோழிக்கோடு நீதிமன்றம் தீர்ப்பளித்து உத்தரவிட்டது. சரிதா நாயர் தன்னை ஏமாற்றியதாக கூறிய, முதல் குற்றவாளியான பீஜு ராதா கிருஷ்ணன் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படவில்லை.