களம்காணும் சிங்கப்பெண்கள்! ஷாஹின்பாக் முதல் கர்நாடகா வரை... போராட்டங்களும், பெண்களும்!
முஸ்கான் எழுப்பிய அல்லாஹு அக்பர் என்ற குரல் அடக்கு முறைக்கு எதிரான குரலாக இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவில் பேசப்படுகிறது.
இந்தியாவில் தற்போது கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களிலும் பிரதான பேசுபொருளாகியிருக்கிறார் முஸ்கான் கான் என்ற மாணவி. கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை கடந்த டிசம்பரிலேயே ஆரம்பித்துவிட்டாலும், தற்போது பூதாகரமாகியிருக்கிறது. இதுநாள் வரை இஸ்லாமிய மாணவிகள் அமைதியாக போராடிக்கொண்டிருந்தவரை இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படவில்லை. முஸ்கான் எழுப்பிய அல்லாஹு அக்பர் என்ற குரல் அடக்கு முறைக்கு எதிரான குரலாக இந்தியா மட்டுமல்ல, சர்வதேச அளவில் பேசப்படுகிறது. இப்போது மட்டுமல்ல இதற்கு முன்பும் பல போராட்டங்களில் பெண்கள் பிரதானமாகியிருக்கின்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் என்ற தனியார் நிறுவனத்தின் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டு அதனால் பலருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து எவ்வித தகவல்களும் அளிக்கப்படாத நிலையில், இரவு சக பெண் தொழிலாளர்கள் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போராட்டத்துக்கு வந்தனர். அந்த இரவு முழுக்க முக்கிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தரமற்ற உணவை உட்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட பெண்களுடன், மாவட்ட ஆட்சியர் வீடியோ கால் மூலம் பேச வைத்த பிறகு அவர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. விடுதியின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு அமைக்கப்பட்ட அமைச்சரவையில் பெண்கள் இடம்பெறாததை கண்டித்து சம உரிமை வேண்டும், பெண்களுக்கு அரசில் இடம் வழங்க வேண்டும் என்று கோரி் ஏராளமான பெண்கள் காபூலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலிபன்கள் போராட்டக்காரர்களை சாட்டையால் அடிக்கும் பல வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போராட்டத்தில் பேசிய ஒரு பெண். “ நாங்கள் குரல் எழுப்புவது முக்கியம். நான் அஞ்சவில்லை. நான் மீண்டும் மீண்டும் போராட்டத்துக்குச் செல்வேன். சென்று கொண்டே இருப்பேன். அவர்கள் எங்களைக் கொல்லும் வரை. படிப்படியாக இறப்பதை விட ஒரு முறை இறப்பதே மேல்" என்றார்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியாவெங்கும் பல இடங்களில் போராட்டங்கள் பெண்களால் முன்னெடுக்கப்பட்டன. பெண்களால் தலைமை தாங்கப்பட்டு நடத்தப்பட்ட டெல்லியின் ஷாஹின் பாக் போராட்டத்துக்கு பிறகு இந்தியாவெங்கும் பல்லாயிரக் கணக்கான பெண்கள் வீதிக்கு வந்து உரிமை குரல் எழுப்பினர்.
ஜாமியா மிலியா பல்கலை கழகத்தில் நடந்தது இந்தியாவெங்கும் பற்றியெரிந்தது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லியில் உள்ள ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் போலீஸாரால் தாக்கப்பட்டபோது போலிசாருடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு சக மாணவரை அடிக்கவிடாமல் தடுத்தார்கள். பதற்றமான சூழலில் சிறிய அச்சம் கூட இல்லாமல் தங்களது உரிமையை நிலைநாட்டினார்கள் அந்த பெண்கள்.
டெல்லியில் மழை, குளிர், வெயில் என எதை பற்றியும் கவலைப்படாமல் விவசாயிகளின் போராட்டம் ஒரு வருடத்துக்கும் மேலாக தொடர்ந்தது. அந்தப் போராட்டத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகித்தார்கள். சமைப்பது, பரிமாறுவது, மேடைகளில் பேசுவது, பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்புவது என போராட்டக் களத்தில் துடிப்புடன் வலம் வந்தார்கள் பெண்கள்.
கர்நாடகா மாநிலத்தில் பெண்கள் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனக்கூறி வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து கல்லூரிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். அது மாநிலத்தின் பிற பகுதிகளுக்கும் பரவ, ஹிஜாபிற்கு போட்டியாக காவித்துண்டுகளை அணிந்து ஒரு மாணவியை சுற்றி பல மாணவர்கள் ஜெய் ஸ்ரீராம் கோஷமெழுப்பினர். மாணவர்களுக்கு எதிராக, அல்லாஹு அக்பர் என அந்த பெண் முழங்க, இந்த விவகாரம் நாடாளுமன்றம் வரை ஒலித்தது. திருமாவளவன், ஜெய் பீம், அல்லாஹு அக்பர் என நாடாளுமன்றத்தில் ஓங்கி முழங்கினார். அவரைப் போன்று பலரும் மதம் கடந்து பெண்ணின் குரலை அன்று எழுப்பினார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போரட்டம், சேலத்தில் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் என இது போன்று பல்வேறு போராட்டங்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் பெண்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கைக்குழந்தைகளை கையில் ஏந்தியபடி அந்த பெண்கள் போராட்ட களத்தில் அமர்ந்திருக்கும் காட்சிகள் ஒவ்வொரு போராட்டத்திலும் காண முடியும். அரசியல் கலாச்சரம் மற்றும் போரட்டக்களங்களின் வரலாற்றையே பெண்கள் மாற்றியமைத்து கொண்டுருக்கிறார்கள்.
இது பாலின சமத்துவத்தின் காலம். இது எதிர்க்குரலின் காலம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்