Rajasthan: சொந்த கட்சிக்கு எதிராகவே யாத்திரை.. சச்சின் பைலட் மீண்டும் போர்க்கொடி.. ராஜஸ்தான் அரசியலில் பரபரப்பு..!
ஆட்சிக்கு எதிரான மனநிலை, உட்கட்சி பூசலால் ராஜஸ்தான் காங்கிரஸ் தடுமாறி வரும் நிலையில், பைலட்டின் நடைபயணம் தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானில் தற்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் கெலாட் முதலமைச்சராகவும் இளம் தலைவர் சச்சின் பைலட் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றனர்.
2020ஆம் ஆண்டு நடந்தது என்ன?
தொடக்கத்தில், முதலமைச்சர் பதவியைதான் சச்சின் பைலட் கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு கெலாட்டுக்கு இருந்ததால், அவருக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதன் காரணமாக, இருவருக்கும் இடையே தொடர் அதிகார போட்டி நிலவி வந்தது.
இதற்கிடையே, கடந்த 2020ஆம் ஆண்டு, கெலாட் அரசுக்கு எதிராக சச்சின் பைலட்டும் அவரது ஆதரவு 18 சட்டப்பேரவை உறுப்பினர்களும் போர்க்கொடி தூக்கினர். காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலைக்கு சென்ற நிலையில், டெல்லி தலைமையின் தலையீட்டின் காரணமாக ஒரு மாதம் நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது. பின்னர், துணை முதலமைச்சர் மற்றும் மாநில தலைவர் பதவியில் இருந்து பைலட் நீக்கப்பட்டார்.
இருப்பினும் ராகுல்காந்தி, பிரியங்காகாந்தியின் முயற்சியில் சச்சின் பைலட் சமாதானம் செய்யப்பட்டு தற்போது கட்சியில் தொடர்ந்து வருகிறார். இருந்தபோதிலும், பைலட், கெலாட்டுக்கு இடையேயான பிரச்னை முடிந்தபாடில்லை. இந்தாண்டின் இறுதியில், ராஜஸ்தானில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் அரசியல் செய்ய தொடங்கியிருக்கிறார் பைலட்.
அரசியல் செய்ய தொடங்கிய பைலட்:
ஊழல், அரசு பணியாளர் தேர்வு கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தை முன்வைத்து ஜெய்ப்பூர் மாவட்டம் டுடு நகரில் நடைபயணத்தை மீண்டும் தொடங்கியுள்ளார் பைலட். பைலட் தனது 125 கிமீ அஜ்மீர்-ஜெய்பூர் 'ஜன் சங்கர்ஷ் யாத்திரை'யை மே 11 அன்று தொடங்கினார். ஏராளமான ஆதரவாளர்களுடன் யாத்திரையை மேற்கொண்டு வருகிறார்.
ஏற்கனவே, ஆட்சிக்கு எதிரான மனநிலை, உட்கட்சி பூசலால் ராஜஸ்தான் காங்கிரஸ் தடுமாறி வரும் நிலையில், பைலட்டின் நடைபயணம் தலைமைக்கு மேலும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் அரசை கவிழ்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறித்து சமீபத்தில் பேசிய அசோக் கெலாட், "காங்கிரஸ் ஆட்சியை பாஜக தலைவர்கள் காப்பாற்றியதாக கூறி அரசியலில் புயலை கிளப்பினார்.
போர்க்கொடி:
"முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் முக்கிய தலைவருமான வசுந்தரா ராஜே மற்றும் இரண்டு பாஜக தலைவர்கள், 2020ஆம் ஆண்டு, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியபோது ஆட்சியை காப்பாற்றினர்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே, முன்னாள் சட்டசபை சபாநாயகர் கைலாஷ் மேக்வால், எம்.எல்.ஏ ஷோபராணி குஷ்வா ஆகிய மூன்று பாஜக தலைவர்களின் ஆதரவின் காரணமாகவே ஆட்சியை காப்பாற்ற முடிந்தது" என அசோக் கெலாட் பேசியிருந்தார்.