NEP: இந்திய மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதி.. கொதித்து பேசிய பிரதமர் மோடி.. ஏன்?
"அறிவியல் முதல் விளையாட்டு வரையிலான துறைகளில் தங்களைத் தாங்களே திறமைப்படுத்திக் கொள்ளத் தயாராகவும் இருக்கும் ஒரு ஆற்றல்மிக்க புதிய தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும்"
திறனை தவிர்த்து மொழியின் அடிப்படையில் மதிப்பிடுவது மாணவனுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி என பிரதமர் மோடி இன்று தெரிவித்துள்ளார்.
"இந்திய மொழிகள் பின்தங்கிய நிலையின் அடையாளமாக முன்வைக்கப்படுகிறது"
தேசிய கல்வி கொள்கை, 2020, அறிமுகம் செய்யப்பட்டு மூன்றாண்டுகள் நிறைவாகியுள்ள நிலையில், அதை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் அகில பாரதிய சிக்சா சமகத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
அதில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, "தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் இந்தியாவில் மாணவர்களுக்கு புது விதமான நீதி வழங்கப்படுகிறது. இது சமூக நீதிக்கான ஒரு முக்கியமான படியாகும்" என்றார்.
ஐரோப்பா கண்டத்தை மேற்கோள் காட்டி பேசிய அவர், "உண்மையில், பல வளர்ந்த நாடுகள், தங்களின் சொந்த மொழிகளால் முன்னேறியுள்ளன. இந்தியாவில் பல மொழிகள் இருந்தாலும், அவை பின்தங்கிய நிலையின் அடையாளமாக முன்வைக்கப்படுகின்றன. ஆங்கிலம் பேசத் தெரியாதவர்கள் புறக்கணிக்கப்பட்டனர். அவர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படவில்லை. இதனால், கிராமப்புற குழந்தைகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
உலகமே இந்தியாவை புதிய சாத்தியக்கூறுகளுக்கான இடமாக பார்க்கிறது. தங்கள் நாடுகளில் ஐஐடி வளாகங்களைத் திறக்க இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளன" என்றார்.
"சுயநலத்திற்காக மொழியை அரசியலாக்க முயற்சிப்பவர்கள் வேலை இல்லாமல் போய்விடுவார்கள்"
இதை தொடர்ந்து, 12 இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கல்வி மற்றும் திறன் பாடத்திட்ட புத்தகங்களை பிரதமர் வெளியிட்டார். பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைசிங் இந்தியா (PM-SHRI) திட்டத்தின் கீழ், தற்போதுள்ள 6,207 பள்ளிகளை தரம் உயர்த்துவதற்கான முதல் தவணை ரூ.630 கோடியை பிரதமர் மோடி விடுவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "தேசிய கல்விக் கொள்கை கீழ் சமூக அறிவியல் முதல் பொறியியல் வரையிலான பாடங்கள் இப்போது இந்திய மொழிகளில் கற்பிக்கப்படும். மாணவர்கள் ஒரு மொழியில் நம்பிக்கையுடன் இருந்தால், அவர்களின் திறமையும் எந்த தடையுமின்றி வெளிப்படும்.
தங்கள் சுயநலத்திற்காக மொழியை அரசியலாக்க முயற்சிப்பவர்கள் வேலை இல்லாமல் போய்விடுவார்கள். தேசியக் கல்விக் கொள்கை நாட்டிலுள்ள ஒவ்வொரு மொழிக்கும் உரிய மரியாதையையும் பெருமையையும் அளிக்கும். பிராந்திய மொழிகளில் கல்வி கற்பிக்கப்படுவதன் விளைவாக 22 வெவ்வேறு மொழிகளில் 3 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு சுமார் 130 பாடங்களைக் கொண்ட புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்த 25 ஆண்டுகளில் அடிமை மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, புதுமைகளில் ஆர்வமுள்ளவர்களாகவும், அறிவியல் முதல் விளையாட்டு வரையிலான துறைகளில் தங்களைத் தாங்களே திறமைப்படுத்திக் கொள்ளத் தயாராகவும் இருக்கும் ஒரு ஆற்றல்மிக்க புதிய தலைமுறையை நாம் உருவாக்க வேண்டும். 21 ஆம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப, கடமை உணர்வு நிரம்பிய தலைமுறை. தேசிய கல்வி கொள்கை இதில் பெரிய பங்கு வகிக்கும்" என்றார்.