PM Modi: ”கொள்ளை கொள்ளும் அழகு” லட்சத்தீவில் கடல் அருகே கூலாக டைம் பாஸ் செய்த பிரதமர் மோடி!
லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜனவரி 2,3ஆம் தேதிகளில் தமிழ்நாடு, லட்சத்தீவு ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டார். திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் பிரதமர் மோடி. மேலும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இதைத் தொடர்ந்து, லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிலையில், லட்சத்தீவு பயணம் குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் சில கருத்துகளை பதிவிட்டிருக்கிறார்.
”நான் பிரமிப்பில் இருக்கிறேன்"
அதன்படி, ”சமீபத்தில், லட்சத்தீவு மக்கள் மத்தியில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் தீவுகளின் பிரமிக்க வைக்கும் அழகையும் அதன் மக்களின் நம்பமுடியாத அரவணைப்பையும் கண்டு நான் இன்னும் பிரமிப்பில் இருக்கிறேன். லட்சத்தீவு என்பது வெறும் தீவுகளின் கூட்டமல்ல. காலம் காலமாக நீடித்து வரும் பாரம்பரிய மரபு மற்றும் மக்களுக்கான சான்று அது. கற்பதற்கும், வளர்வதற்குமான வாய்ப்பாக எனது லட்சத்தீவு பயணம் அமைந்தது.
அகத்தி, பங்காரம், கவரத்தி போன்ற பகுதிகளில் மக்களுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. லட்சத்தீவு மக்களின் விருந்தோம்பலுக்கு நான் நன்றி கூறுகிறேன். சாகச வீரர்களைக் காணவும் அவர்களை அரவணைக்கவும் விரும்புபவர்கள், தங்களுக்கான பயணப் பட்டியலில் லட்சத்தீவையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
"லட்சத்தீவின் அமைதி என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது”
அங்கு தங்கி இருந்தபோது, நானும் தண்ணீருக்குள் மூழ்கி உள்ளே இருக்கும் இயற்கை காட்சிகளை காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டேன். அது ஓர் உற்சாகமான அனுபவம். அழகிய கடற்கரைகளில் அதிகாலையில் நடைபயணம் மேற்கொண்டது தூய்மையான பேரின்பத்தின் தருணங்களாக இருந்தன.
Lakshadweep is not just a group of islands; it's a timeless legacy of traditions and a testament to the spirit of its people. My visit has been an enriching journey of learning and growing. pic.twitter.com/ygVAn0Ov84
— Narendra Modi (@narendramodi) January 4, 2024
இயற்கை அழகுடன், லட்சத்தீவின் அமைதியும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. 140 கோடி இந்தியர்களின் நலனுக்காக இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்க இந்த பயணம் எனக்கு வாய்ப்பளித்தது. ஆரோக்கியம், தன்னம்பிக்கை, பெண்கள் முன்னேற்றம், விவசாய நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியை அறிந்தபோது ஊக்கமளிப்பதாக இருந்தது. அரசின் பல்வேறு திட்டங்களின் பயனாளிகளும் என்னிடம் உரையாடினார்கள்" என்றார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதவிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.