Mumbai : தாவூத் இப்ராஹிமுடன் தொடர்பு? இருவரை அதிரடியாக கைது செய்த என்.ஐ.ஏ! நடந்தது என்ன?
சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் தாவூத் இப்ராஹிம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை சார்பில் தேடப்படும் குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனக் கூறப்பட்டு கடந்த மே 13 அன்று இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த சகோதரர்களான ஆரிஃப் அபுபக்கர் ஷேக் (59), ஷபீர் அபுபக்கர் ஷேக் (51) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அங்கிருந்து வரும் மே 20 வரை, தேசிய புலனாய்வு முகமையின் காவலில் இருவரையும் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தாவூத் இப்ராஹிமின் குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும், இருவரிடம் இருந்து பெரிய தொகையிலான பணமும், பல்வேறு ஆதாரங்களும் கிடைத்துள்ளதாகத் தேசிய புலனாய்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள இருவரும் தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி சோட்டா ஷகீலிடம் பணம் வாங்கி பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அரசியல்வாதிகளைக் குறிவைக்கத் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக அந்நிய செலாவணியில் ஈடுபடுவோர் மீதான விசாரணையில் இந்த இரண்டு சகோதரர்களும் சிக்கியுள்ளதாகவும், இருவரும் சோட்டா ஷகீலுடன் தொடர்புடையவர்கள் எனவும் தேசிய பாதுகாப்பு முகமை கூறியுள்ளது. தாவூத் ஆட்களுடன் தொடர்புகொள்ள இருவரும் பயன்படுத்திய செல்ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ள தேசிய புலனாய்வு முகமை, தாவூத், ஷகீல் ஆகியோர் சர்வதேச பயங்கரவாதிகள் எனவும், இந்த விசாரணையின் மூலம் அவர்களது இருப்பிடம் கண்டுபிடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், தேசிய புலனாய்வு முகமை சார்பில் தாவூத் மீது ஊபா சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஆரிஃப், ஷபீர் ஆகிய இருவர் மீதும் ஊபா வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று இருவரும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்ட போது, தேசிய பாதுகாப்பு முகமை இருவரிடமும் மோசமாக நடந்துகொண்டதா எனக் கேட்கப்பட்ட போது, இருவரும் `இல்லை’ எனக் கூறியுள்ளனர். மேலும் ஆரிஃப், `எந்தப் புகாரும் இல்லை.. நாங்கள் இந்தியாவை நேசிக்கிறோம்.. சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா’ என்று கூறியுள்ளார்.
தற்போது கைது செய்யப்பட்டிருக்கும் ஆரிஃப், சோட்டா ஷகீலின் மைத்துனர். அவர் ஷகீலின் சகோதரி ஃபெமிதாவைத் திருமணம் செய்தவர். ஃபெமிதா கடந்த 2020ஆம் ஆண்டு உயிரிழந்தார். கடந்த 2016ஆம் ஆண்டு, மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக மும்பை காவல்துறையின் குற்றப்பிரிவால் ஆரிஃப் கைது செய்யப்பட்டவர்.
வழக்கறிஞர்கள் இல்லாமல் ஆஜர் செய்யப்பட்டதால், இருவரிடம் சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் வழக்கறிஞர் தேவையா எனக் கேட்ட போது, ஆம் என்று தெரிவித்துள்ளனர். இருவருக்கு சட்ட உதவி மையத்தில் இருந்து வழக்கறிஞர்களை நியமிக்குமாறு நீதிமன்றம் கூறியுள்ளது.
சட்ட உதவி மையம் சார்பில் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அபெக்ஷா வோரா, தேசிய புலனாய்வு முகமையின் காவலின் விசாரணைக்காக இரு சகோதரர்களும் வைக்கப்படுவது தேவையற்றது எனவும், தாவூத் இப்ராஹிம் கைது செய்யப்பட வேண்டும் என்றால் அவரைக் கண்டுபிடிக்க இண்டர்போல் உதவியை நாட வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும், போதிய ஆவணங்கள் இன்றி, பயங்கரவாதம் செய்ய பணம் பெற்றார்கள் எனவும், அரசியல்வாதிகளைக் குறிவைத்தார்கள் எனவும் கூறுவது தவறு எனவும் தெரிவித்துள்ளார்.
சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராகுல் போசலே தாவூத், ஷகீல் ஆகியோரைத் தேடுவதும் வழக்கின் ஒரு பகுதி என்ற போதும், தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்களுக்கும், தேடப்படுவோருக்கும் இடையிலான தொடர்பைக் கண்டுபிடிக்க வேண்டும் எனக் கூறி, மே 20 வரை காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.