டெல்லி செல்லும் மம்தா பானர்ஜி : முக்கிய தலைவர்களுடன் நேரில் சந்திப்பு..!
இன்று டெல்லி செல்லும் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி சோனியாகாந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முக்கிய தலைவர்களை சந்திக்க உள்ளார்.
மக்களவையிலும், மாநிலங்களவையிலும் பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க. அரசு ஆட்சியில் உள்ளது. மேலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில், பா.ஜ.க.வையும், மோடி அரசையும் தீவிரமாக எதிர்த்து வரும் தலைவர்களில் தேசியளவில் மம்தா பானர்ஜி முக்கியமான தலைவராக உள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை வீழ்த்த பா.ஜ.க. எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும், கடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக தொடர்ந்து மேற்கு வங்க முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள சூழலில், தேசியளவில் பா.ஜ.க.விற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைக்க முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த முயற்சியை மம்தா பானர்ஜி கடந்த சில ஆண்டுகளாகவே முன்னெடுத்து வருகிறார்.
இந்த சூழலில், மம்தா பானர்ஜி இன்று டெல்லி செல்கிறார். இன்று டெல்லி செல்லும் அவர் டெல்லியிலே 5 நாட்கள் முகாமிட உள்ளார். மம்தா பானர்ஜியின் 5 நாட்கள் டெல்லி பயணத்தின்போது 2024ம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல் பணிகள் முன்னெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் மம்தா பானர்ஜி தேசிய அளவில் மிகவும் முக்கியமான தலைவர்களை சந்திக்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பிற்கான திட்டமிடல்களை அபிஷேக் பானர்ஜியும், அரசியல் வியூக நிபுணருமான பிரசாந்த் கிஷோரும் திட்டமிட்டுள்ளனர்.
டெல்லியில் மம்தா பானர்ஜி முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைவர்களான சோனியாகாந்தி, ராகுல்காந்தியை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டுமின்றி, தி.மு.க., தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, சிவசேனா உள்பட தேசிய அளவில் முக்கியமான கட்சிகளின் தலைவர்களையும், பிரதிநிதிகளையும் சந்திக்க உள்ளார். சோனியாகாந்தியுடன் நடைபெற உள்ள சந்திப்பின்போது, நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட உள்ளது என்று தகவல் வெளியானது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.விற்கு எதிராக வலுவான கூட்டணியை அமைத்த எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிப்பதில் ஏற்பட்ட தாமதம், ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதில் தயக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தோல்வியுற்றது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 11 உறுப்பினர்களும் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, பெகசஸ் உளவு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளால் மத்திய அரசுக்கு கடும் அழுத்தத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.