குமரி ஆனந்தனின் 91வது பிறந்தநாள்...தெலங்கானா ஆளுநருடன் கேக் வெட்டி கொண்டாட்டம்...!
இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன் இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
இலக்கிய செல்வர் குமரி ஆனந்தன் இன்று தனது 91வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் 91வது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள்,செவிலியர்கள் தெலுங்கானா ராஜ்பவன் பணியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌதரராஜன் ஆகியோருடன் சிறப்பாக பிறந்த நாளை கொண்டாடினார்.
யார் இந்த குமரி ஆனந்தன்?
முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்த தற்போதைய குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தை அடுத்த குமாரி மங்கலத்தைச் சேர்ந்தவர் தான் இந்த குமரி ஆனந்தன். தெலுங்கானா மற்றும் புதுச்சேரியின் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை. குமரி ஆனந்தனின் மனைவி பெயர் கிருஷ்ணகுமாரி, இவரது தந்தை, கலைஞர் கருணாநிதியின் புத்தகங்களை அச்சடித்து வெளியிட்டவர். காமராஜர் காலத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியில் இயங்கி வரும் குமரி ஆனந்தன் எந்த வித கரையும் படியாத சுத்தமான அரசியல்வாதி.
தனது அரசியல் பலத்தை வைத்துக் கொண்டு எந்த ஒரு சிறு விமர்சனத்துக்கு கூட இடம் கொடுக்காமல் ஊழலுக்கு இடம் கொடுக்காமல் தனது பெயர் கெட்டுப் போகாமல் இதுவரை பார்த்து வருகிறார் என்பதுதான் இந்த முதுபெரும் அரசியல் வாதியின் சிறப்பு அம்சமாகும். இவர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தாலும், தற்போது காங்கிரஸ் தொண்டராகவே இருந்து தனது கடமையை ஆற்றி வருகிறார்.
அரசியல் வாழ்க்கை
1977ஆம் ஆண்டு நாகர்கோவிலில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1980ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திருவெற்றியூர் தொகுதியில் வென்றார். இதனை தொடர்ந்து 1984ல் ராதாபுரம் சட்டமன்ற தொகுதியில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தொகுதியில் சாத்தான்குளத்தில் வெற்றி பெற்றார். 1991ல் மீண்டும் சாத்தான்குளத்தில் வெற்றி பெற்றார். அரசியில் வாழ்க்கையில் 19 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றி உள்ளார் குமரி ஆனந்தன். இதனை அடுத்து, 1996ல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தமிழக தலைவர்களின் அதிக பாத யாத்திரை மேற்கொண்டவர் குமரி ஆனந்தன். இவர் 1967ல் முதல் பல பாத யாத்திரைகளை மேற்கொண்டார். குறிப்பாக திருவல்லிக்கேணி முதல் புதுச்சேரி வரையிலான 180 கி.மீ தூரம் பாத யாத்திரையை மேற்கொண்டார். பணை மரத்தை பாதுகாக்க வேண்டும், நதிகள் இணைப்பு, தருமபுரியில் பாரத மாதாவுக்கு கோவில் கட்டுதல் போன்றவற்றை வலியுறத்தி பாத யாத்திரை மேற்கொண்டார்.
இதற்கிடையில், கடந்த 2011ஆம் ஆண்டு தினந்தந்தி மூத்த தமிழறிஞர் விருதை குமரி ஆனந்தனுக்கு வழங்கப்பட்டது. சமீபத்தில் 2021ஆம் ஆண்டிற்கான பெருந்தலைவர் காமராஜர் விருதை தமிழக அரசு குமரி ஆனந்தனுக்கு வழங்கி சிறப்பித்தது. இலக்கியச் செல்வர், தமிழ் பற்றாளர், சிறந்த மேடைப்பேச்சாளர் என பன்முகம் கொண்ட முதுபெரும் தலைவர் குமரி ஆனந்தன் இன்று 91வது பிறந்தநாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.