MLA Bus Driving: அரசு பேருந்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய பெண் எம்.எல்.ஏ. - கர்நாடகாவில் நடந்தது என்ன?
கர்நாடகாவில் பெண் சட்டமன்ற உறுப்பினர் அரசு பேருந்தை ஓட்டியது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து பயண திட்ட தொடக்க விழாவில் கேஜிஎப் எம்.எல்.ஏ ரூபகலா பேருந்தை 100 மீட்டர் தூரம் வரை ஓட்டிச் சென்றது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
சக்தி திட்டம்:
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் ஆகியோர் நேற்று சக்தி திட்டம் எனும் திட்டத்தை தொடங்கி வைத்தனர். இந்த திட்டம் கர்நாடகா முழுவதும் செயல்படுத்தப்படும் என்றும், சாதாரண பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் வளர்ச்சிக்கான முக்கிய நடவடிக்கையாக இது இருக்கும் என்றும் பெண்கள் மட்டுமின்றி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து:
இந்த இலவச பேருந்து திட்டத்தின் தொடக்க விழாவில் கேஜிஎப் எம்.எல்.ஏ ரூபகலா, கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்தை 100 மீட்டர் தூரத்திற்கு ஓட்டினார். கே.ஜி.எப் நகராட்சி உறுப்பினர் ஒருவர் வற்புறுத்தியதால் அவர் பேருந்தை ஓட்டியதாக கூறப்படுகிறது. அந்த பேருந்தில் ஓட்டுநர், இருக்கையின் அருகே நின்று கொண்டு எம்.எல்.ஏவிற்கு கியரை மாற்றிக் கொடுத்து பேருந்தை ஓட்ட உதவி செய்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அவர் ஓட்டுநரின் உதவி இல்லாமல் மற்றுமொறு முறை கியரை மாற்ற முயன்ற போது பேருந்து பின்னோக்கி சென்று அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது மோதியது.
இதனிடையே, இந்த திட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, "கர்நாடகா முழுவதும் பெண்கள் சவுகரியமாக பயணிப்பதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். எந்தெந்த பகுதிகளில் பேருந்து இயக்கம் குறைவாக உள்ளதோ அந்த பகுதிகளில் பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்றார்.
ஸ்மார்ட் கார்டுகள்:
இந்த திட்டத்தில் பயன்பெற சக்தி ஸ்மார்ட் கார்டு என்ற கார்டை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இதை பெற பெண்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அடுத்த 3 மாதங்களுக்கு இந்த ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டை ஆவணமாகப் பயன்படுத்தி பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்றும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. அதுவரை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி இலவசமாக பயணிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண கட்டண பேருந்துகளில் மட்டுமே இலவசமாக பயணிக்க முடியும் எனவும், இத்தகைய பேருந்துகளில் ஆண்களுக்கு 50 சதவீத இருக்கைகள் ஒதுக்கப்படும் என்றும் அம்மாநில போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி கொடுத்த வாக்குறுதிகளில் இந்த சக்தி திட்டமும் ஒன்று.
மேலும் படிக்க
Mettur dam: மேட்டூர் அணை இன்றைய நிலவரம்: நீர்வரத்து 867 கனஅடியாக அதிகரிப்பு