Kerala Trekker Stuck: மலை உச்சியில் சிக்கிய இளைஞர்.. 30 மணி நேரமாக உயிருக்கு போராட்டம்.. மீட்க விரைந்த ராணுவம்!
Kerala Trekker Stuck: கேரளா பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா செங்குத்து மலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் மலை துவாரத்தின் முகத்தில் சிக்கி 30 மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடி வருகிறார்.
கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா பகுதியின் செங்குத்து மலையில் 23 வயதான இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் மலையேற்றத்தில் ஈடுபட்டபோது மலை துவாரத்தின் முகத்தில் சிக்கி 30 மணி நேரத்திற்கு மேலாக உயிருக்கு போராடி வரும் சம்பவம் அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலம்புழா, சேரடு பகுதியைச் சேர்ந்த ஆர்.பாபு (23) என்பவர், கடந்த திங்கள்கிழமை எலிச்சிரம் அருகே உள்ள குரும்பாச்சி மலையில்தனது மூன்று நண்பர்களுடன் திங்கள்கிழமை மதியம் மலையேறினார். கீழே மலையேற்றம் செய்து கொண்டிருந்த போது, களைத்துப் போன பாபு பிளவில் தவறி கீழே விழுந்துள்ளார்.
கீழே விழுந்ததில் பாபுவின் காலில் காயம் ஏற்பட்டது. அதன்பிறகு கொடிகள் மற்றும் குச்சிகளை பயன்படுத்தி பாபுவை மீட்க நண்பர்கள் எடுத்த முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, பாபுவின் நண்பர்கள் மலையிலிருந்து இறங்கி, அப்பகுதி மக்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
நள்ளிரவில் கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் மலம்புழா போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பார்வை குறைபாடு காரணமாக அவர்களால் மீட்புப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. இருப்பினும், பாபுவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக குழு அருகில் தங்கியிருந்தது. இரவு நேரத்தில் வன விலங்குகள் வராமல் இருக்க, குழுவினர் தீப்பந்தங்களை ஏற்றினர்.
செவ்வாய்கிழமை :
பாலக்காடு மாவட்ட ஆட்சியர் ம்ருண்மயி ஜோஷியின் வேண்டுகோளின்படி பாபுவை விமானத்தில் ஏற்றிச் செல்லும் முயற்சியில் கடலோர காவல்படை ஹெலிகாப்டர் சம்பவ இடத்திற்கு வந்தது. ஆனால் ஹெலிகாப்டரால் பாபு சிக்கிய செங்குத்தான சரிவுக்கு அருகில் செல்லவோ அல்லது மலை உச்சியில் தரையிறங்கவோ முடியவில்லை. நிலைமையை அறிந்த கடலோர காவல்படையினர் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து கடலோர காவல்படை வெளியிட்ட அறிவிப்பின்படி, ஹெலிகாப்டர் பைலட் விமானத்தை உயிருக்கு சிக்கித் தவிக்கும் நபரின் முகடு அருகே விமானத்தை நகர்த்த முடிவு செய்துள்ளார்.ஆனால் "நிலப்பரப்பின் செங்குத்தான மற்றும் பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக ஹெலிகாப்டரால் அவர் அருகே செல்ல முடியவில்லை என்று தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பாபு, தான் சிக்கிய இடத்தை செல்ஃபி மற்றும் புகைப்படங்களை தனது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தி தனது நண்பர்களுக்கும் காவல்துறையினருக்கும் அனுப்பியுள்ளார்.அந்த புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகிறது.
ஒரு நாளாக மலையில் சிக்கித் தவிக்கும் பாபுவுக்கு பெரிய அளவில் உடல்நலக் குறைவு இல்லை என பாலக்காடு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அவருக்கு உணவு மற்றும் தண்ணீர் கொண்டு செல்லவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கேரள முதல்வர் பினராயி விஜயன் :
கேரள முதல்வர் பினராயி விஜயனும் தலையிட்டு அந்த இளைஞர்களை பாதுகாப்பாக மீட்க ராணுவத்தின் உதவியை நாடினார். அதைத் தொடர்ந்து, ராணுவத்தின் தெற்குப் படையின் லெப்டினன்ட் ஜெனரல் அருண், விரைவில் பெங்களூரில் இருந்து ஒரு சிறப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வரும் என்று முதல்வர் அலுவலகத்திற்கு (சிஎம்ஓ) தகவல் தெரிவித்துள்ளார்.
மலையேறுதல் மற்றும் மீட்பு பணிகளில் நிபுணத்துவம் பெற்ற குழு, இரவில் ஹெலிகாப்டரில் பயணம் செய்வது சாத்தியமற்றது என்பதால் சாலை வழியாக பயணிக்கும் என்றும், மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக மற்றொரு குழு மாலையில் தமிழகத்தின் வெலிங்டனில் இருந்து பாலக்காடுக்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணுவம் தவிர, விமானப்படையினரும் மீட்புப் பணிகளில் ஈடுபடுவார்கள் என்றும், பாரா கமாண்டோக்கள் பெங்களூரில் இருந்து சூலூருக்கு விமானம் மூலம் அனுப்பப்பட்டு அங்கிருந்து மலம்புழாவை சென்றடைவார்கள் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்