Karnataka Anti-conversion Bill | புயலைக் கிளப்பும் மதமாற்றத் தடைச் சட்டம்... சர்ச்சையும் பின்னணியும்.! ஒரு பார்வை!!
சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தார் ஜெ. இதனால் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. அதையடுத்து அந்தச் சட்டத்தை நீக்கினார் ஜெயலலிதா.
![Karnataka Anti-conversion Bill | புயலைக் கிளப்பும் மதமாற்றத் தடைச் சட்டம்... சர்ச்சையும் பின்னணியும்.! ஒரு பார்வை!! Karnataka passes anti-conversion bill in assembly: Background of the controversy and BJP's explanation Karnataka Anti-conversion Bill | புயலைக் கிளப்பும் மதமாற்றத் தடைச் சட்டம்... சர்ச்சையும் பின்னணியும்.! ஒரு பார்வை!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/25/88ee3ffb66777e8ab4d9cf87b7f2aefc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாஜக ஆளும் மாநிலங்களில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் படிப்படியாகக் கொண்டுவரப்படும் நிலையில், கர்நாடகாவில் இந்தச் சட்டத்துக்கான மசோதா அண்மையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ.10 லட்சம் வரையில் அபராதமும் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களிலேயே மதமாற்றத் தடைச் சட்டம் அமலுக்கு வந்திருந்தாலும், எதிர்ப்பு காரணமாகச் சட்டம் கைவிடப்பட்ட வரலாறு உண்டு.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய ஆட்சிக் காலத்தில் 2002-ம் ஆண்டு கட்டாய மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தார். இதற்கு பாஜகவைத் தவிர திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் சட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருந்தார் ஜெ. இதனால் அடுத்து வந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்தது. அதையடுத்து அந்தச் சட்டத்தை நீக்கினார் ஜெயலலிதா.
ஆனால் மத்தியில் ஆளும் பாஜக அரசின் அடிப்படைக் கொள்கைகளில், மதமாற்றத் தடைச் சட்டமும் ஒன்று. இதனால், பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலும் பாஜக ஆளும் மாநிலங்களில், தொடர்ந்து கட்டாய மதமாற்றத் தடைச்சட்டம் கொண்டுவரப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இதற்கான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. ஹரியாணாவும் இந்தச் சட்டத்தைக் கொண்டு வருவதில் முனைப்புக் காட்டி வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் கட்டாய மதமாற்றத் தடைச்சட்டத்துக்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் சட்டம்; பின்னணி என்ன?
பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் தாழ்த்தப்பட்டோரும், ஏழைகளும் அதிகளவில் மதமாற்றம் செய்யப்படுவதாகப் புகார் எழுந்தது. கட்டாய மதமாற்றப் புகாரில் கிறிஸ்தவப் பாதிரியார்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த 5 ஆண்டுகளில் மதம் மாறியவர்கள் தொடர்பான தகவல்களை சேகரிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது.
இதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்தச் சட்டம் 'மக்களுக்கு எதிரானது', 'மானுடத் தன்மை அற்றது', 'அரசியலமைப்புச் சட்டத்துக்கும் ஏழை மக்களுக்கும் எதிரானது' என்று தெரிவித்தன. எனினும், கர்நாடகா மதச் சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதாவை (Karnataka Protection of Right to Freedom of Religion Bill) பாஜக தாக்கல் செய்தது.
புதிதாக மதம் மாறுவது எப்படி?
இந்த மசோதாவின்படி மதம் மாற விரும்புவோர் 1 மாதத்துக்கு முன்னதாக, அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தான் தங்கியிருக்கும் மாவட்டம் அல்லது பிறந்த இடத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர் அல்லது துணை ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் காவல்துறை மூலம் மதமாற்றம் என்ன காரணத்துக்காக நடைபெறுகிறது என்று விசாரணை செய்து, விண்ணப்பத்துக்கு அனுமதி வழங்குவர்.
அதேபோல தங்களுடைய மதத்தை மாற்றிக்கொள்ள விரும்புவோர், அந்த மதத்தில் ஏற்கெனவே அனுபவித்து வந்த இடஒதுக்கீட்டுச் சலுகைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் புதிய மதத்தில் உள்ள ஒதுக்கீட்டுச் சலுகைகள், சம்பந்தப்பட்டவருக்குக் கிடைக்கும்.
மசோதா கூறுவது என்ன?
அனைத்து மக்களின் மதச் சுதந்திரத்திற்கான உரிமை நிலைநாட்டப்படும். சட்ட விரோதமான வழியில் ஒரு மதத்தில் இருந்து மற்றொரு மதம் மாறுவது தடை செய்யப்படும்.
தவறாகச் சித்தரித்தல், வற்புறுத்தல், கட்டாயப்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 3 முதல் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும். ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 18 வயதுக்குக் கீழ் உள்ள சிறார், பெண்கள், தாழ்த்தப்பட்ட வகுப்பு, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களை மதமாற்றம் செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரத்துக்குக் குறைவில்லாமல் அபராதமும் விதிக்கப்படும்.
மதமாற்றம் செய்யப்பட்டோருக்கு இழப்பீடு
அதேபோலக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யப்பட்டோருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு (நீதிமன்ற உத்தரவுப்படி) வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக நிறையப் பேரை மதமாற்றம் செய்ய வைப்போருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். தொடர்ந்து இதே குற்றங்களை மேற்கொண்டால், இரட்டிப்பு அபராதம் அதாவது ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
திருமணங்கள் செல்லாது
மதமாற்றம் செய்வதற்காகவே மேற்கொள்ளப்படும் திருமணங்கள் செல்லாது என்று குடும்ப நீதிமன்றம் அல்லது பிற நீதிமன்றங்களால் அறிவிக்கப்படும்.
தாய்மதம் திரும்புபவர்களுக்குப் பொருந்தாது
கட்டாய மதமாற்றத் தடைச் சட்ட விதிகள் வற்புறுத்தல், மோசடி வழிமுறை அல்லது திருமணத்திற்காக மதம் மாற்றம் செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால் குறிப்பிட்ட நபர், தன்னுடைய முந்தைய மதத்திற்கு அதாவது தாய் மதத்துக்கு மீண்டும் மாறினால், அது மத மாற்றமாக- குற்றமாகக் கருதப்படாது.
ஜாமீனில் வெளிவர முடியாத குற்றம்
கர்நாடகா மதச் சுதந்திர உரிமை பாதுகாப்பு மசோதா 2021-ன் படி, கட்டாய மதம் மாற்ற நபர் மீது, ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்குப் பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இத்தகைய சட்டங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இது கிறிஸ்துவம் உள்ளிட்ட சிறுபான்மை சமுதாயங்களுக்கு எதிரான முன்னெடுப்பு என்று எச்சரிக்கிறார் தமிழக காங்கிரஸ் துறைசார் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சசிகாந்த் செந்தில்.
இதுகுறித்து 'ஏபிபி'யிடம் அவர் கூறும்போது, ''இந்தியாவில் கிறிஸ்துவ மிஷினரிகள் பன்னெடுங்காலமாக ஏராளமான கல்வி நிறுவனங்கள் மூலம் கல்வி கற்பித்து வருகின்றன. கிறிஸ்துவர்கள் கல்வி நிறுவனங்கள், சொத்துகளை வைத்திருப்பது பாஜகவின் கண்களை உறுத்துகிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதாவது இத்தகைய சட்டங்களின்மூலம், கல்வி நிறுவனங்களில் கல்வியை இலவசமாகக் கொடுத்து, கட்டாய மதமாற்றம் நடைபெறுகிறது என்று கூறவும் வாய்ப்புள்ளது. இஸ்லாமிய சமுதாயத்தையும் பாஜக குறிவைத்தாலும் அவர்களின் முதன்மை இலக்கு கிறிஸ்தவர்கள்தான். ஏனெனில் அவர்களிடம் கல்வி இருக்கிறது.
அதேபோல மதத்துக்குள்ளாக நடைபெறும் திருமணங்களை ஒடுக்கவும் பாஜக ஆசைப்படுகிறது. திருமணம் என்பது உணர்வுபூர்வமான ஒன்று. ஆனால் பெண்களை வெறும் பண்டமாக மட்டுமே நினைக்கும் பாஜக, அவர்களுக்குப் பிடித்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை என நினைக்கிறது. இத்தகைய அணுகுமுறை கூடாது என்றே அரசியலமைப்புச் சட்டத்தில் இதுகுறித்துப் பேசப்படவில்லை. ஆனால் சட்டங்கள் மூலம் அதைக் கொண்டு வர ஆணாதிக்க மனநிலை கொண்ட பாஜக நினைக்கிறது.
![Karnataka Anti-conversion Bill | புயலைக் கிளப்பும் மதமாற்றத் தடைச் சட்டம்... சர்ச்சையும் பின்னணியும்.! ஒரு பார்வை!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/25/9391f56d605de34522200804042ca16d_original.jpg)
'கட்டாய மதமாற்றம் என்பது என்ன?'
கிறிஸ்துவ மற்றும் இதர சிறுபான்மை வகுப்புகளைக் கட்டுப்படுத்தவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது. கட்டாய மதமாற்றம்தான் தவறு என்றுதான் சட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் கட்டாய மதமாற்றம் என்பது என்ன என்று வரையறுக்கப்படவில்லை. திருமணம் செய்துகொள்வதே கட்டாய மதமாற்றம் என்கிறார்கள். இவர்களா நவீன இந்தியாவைக் கொண்டுவருவார்கள்?
நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி, சில நாடகங்களை அரங்கேற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. அவ்வாறு செய்து இந்துக்களை ஓரணியில் திரட்டும் உத்தியாகவும் இதைப் பார்க்கலாம்'' என்கிறார் சசிகாந்த் செந்தில்.
எனினும் இந்தக் குற்றச்சாட்டைக் கடுமையாக மறுக்கிறார் பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன். ''இந்தியாவில் இருக்கும் யாரையும் மதம் மாறுங்கள் என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. அப்பாவி மக்களை ஏமாற்றி, வசீகரித்து, மனதை மடைமாற்றி மதமாற்றம் செய்கிறார்கள். வியாபார நோக்கத்துடன் மதம் மாற்றுவது மிகப்பெரிய கொடுமை.
மதம் என்பது ஒருவர் படிக்கும் பட்டப் படிப்பில்லை. ஒருவர் பிறக்கும் முன்பே, அவரின் பரம்பரை, குடும்பம், கிராமம், சூழல் அனைத்தையும் சார்ந்ததே மதம். நம்முடையது தொன்மையான மதம்.
'உள்நோக்க மதமாற்றம்தான் தவறு'
இல்லாதவர்களுக்கு உதவலாம். முடியாதவர்களுக்குக் கல்வி கொடுக்கலாம். அதில் எந்தக் கருத்து மாறுபாடும் இல்லை. ஆனால் உள்நோக்கத்துடன் இதைச் செய்து, மதமாற்றம் செய்வதைத்தான் தவறு என்கிறோம்.
![Karnataka Anti-conversion Bill | புயலைக் கிளப்பும் மதமாற்றத் தடைச் சட்டம்... சர்ச்சையும் பின்னணியும்.! ஒரு பார்வை!!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/25/4b0ee8014e035456d12e4e435010b0dd_original.jpg)
இங்கு யாரும் மதம் மாற வேண்டாம். கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்களாக இருங்கள். முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இருங்கள். அதை யாரும் எதுவும் சொல்லவில்லை. அதேபோல இந்துக்கள் இந்துக்களாக இருங்கள் என்கிறோம். இந்திய ஜனநாயக நாட்டில் எல்லோரும் சமம் என்றுதானே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். எல்லோரும் ஒருவரை ஒருவர் நண்பராக பாவிக்கும் சூழலில், பிரிவினைவாதத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்துபவர்களே மதமாற்றம் செய்பவர்கள்தான்.'' என்கிறார் கரு.நாகராஜன்.
'விருப்பம் இங்கே திணிக்கப்படுகிறது'
தனிமனித உரிமையில் தலையிடுவது சரியா? விருப்பத்தின்பேரில் மதம் மாறக்கூடாதா? எனக் கேட்டபோது, ''விருப்பம் இங்கே திணிக்கப்படுகிறது. திட்டமிட்டு அந்தச் சூழல் உருவாக்கப்படுகிறது. இது மிகவும் வருந்தக்கது. இதையே சிலர் தொழிலாகச் செய்கின்றனர். இதனால் மக்களின் அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது. அதைத் தடுக்கவே மாநிலங்கள் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருகின்றன.
திருடினால், கொலை செய்தால் குற்றம் எனச் சட்டம் இருக்கிறது. அதற்காக மக்கள் மீது சந்தேகப்படுவதாக, குற்றம் சுமத்துவதாக அர்த்தமில்லை. அதேபோலத்தான் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டமும். இதில் எந்தத் தவறுமில்லை'' என்று கரு.நாகராஜன் தெரிவித்தார்.
கர்நாடக சட்டப்பேரவையில் இந்த சட்ட மசோதா குறித்து சுமார் ஆறு மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில், காந்தியடிகள், அம்பேத்கர் ஆகியோரின் கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. அவை அனைத்துமே தனி மனிதச் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாது என்றே அமைந்த கருத்துகள். அரசியல் சாசனச் சட்டத்தின் 25வது பிரிவு முன்வைப்பது இதுதான்... ஒருவரின் மதத் தேர்வு என்பது அவரது சுயவிருப்பத் தேர்வு. அதில் யாரும் தலையிட முடியாது. தலையிடவும் கூடாது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)