ஊழல் குற்றச்சாட்டில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கடி? நீதிமன்றம் வழங்கிய பரபர தீர்ப்பு!
ஊழல் குற்றச்சாட்டில் தனக்கு எதிராக விசாரணை செய்ய ஆளுநர் அளித்த ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முடா ஊழல் குற்றச்சாட்டில் தனக்கு எதிராக விசாரணை செய்ய கர்நாடக ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்த நிலையில், அதை எதிர்த்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தாக்கல் செய்த மனுவை கர்நாடக உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் (முடா) நிலத்தை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில், கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 17 ஏ மற்றும் பாரதிய நாகரிக் சுரகா சன்ஹிதா, 2023 சட்டம் பிரிவு 218 இன் கீழ் வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் அனுமதி அளித்திருந்தார்.
சித்தராமையாவுக்கு நெருக்கடி? சிட்டிங் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல் வழங்கி இருப்பது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. முதலமைச்சர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான பாஜகவும் அதன் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளமும் வலியுறுத்தி வருகிறது.
இதற்கிடையே, தனக்கு எதிராக விசாரணை செய்ய ஆளுநர் அளித்த ஒப்புதலுக்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதிபதி எம். நாகபிரசன்னா வழங்கிய தீர்ப்பில், "புகார்தாரர்கள் புகாரை பதிவு செய்வது அல்லது ஆளுநரிடம் ஒப்புதல் பெறுவது நியாயமானது.
நீதிமன்றத்தின் பரபர தீர்ப்பு: ஊழல் தடுப்புச் சட்டத்தின் 17A பிரிவின் கீழ் ஒப்புதல் பெறுவது புகார்தாரரின் கடமை. ஆளுநர் சுயாதீனமாக முடிவு எடுக்கலாம். மனுவில் கூறப்பட்டுள்ள உண்மைகளை சந்தேகத்திற்கு இடமின்றி விசாரிக்க வேண்டும். நிலத்தை பெற்று பயன் பெற்றவர்கள், மனுதாரரின் குடும்பமே தவிர வெளியில் யாரும் இல்லை. எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பெயரில் உள்ள சுமார் 3 ஏக்கர் நிலத்தை, மைசூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் கையகப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, அவருக்கு கூடுதல் மதிப்புள்ள நிலங்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது , மனைவியின் சொத்து மதிப்பு குறித்து சித்தராமையா தெரிவிக்கவில்லை என சுற்றுச்சூழல் அமைப்பைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் ஆளுநர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.