சுதந்திரம் 1947ல இல்ல.. 2014ல.. பாஜகவை புகழ்வதாக நினைத்து சிக்கலில் சிக்கிய கங்கனா!
இந்தியாவின் சுதந்திரம் குறித்து விமர்சித்த நடிகை கங்கனா ரனாவத்துக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவிற்கு 1947 ல் இல்லை 2014 ல் தான் சுதந்திரம் கிடைத்து என பிரபல பாலிவுட் நடிகர் கங்கனா ரனாவத் கூறியதை தேச துரோக செயல் என்று தான் அழைக்க வேண்டும் என பாஜக எம்.பி வருண் காந்தி கூறியுள்ளார்.
இந்தி திரையுலகில் அறிமுகமான நடிகை கங்கனா ரனாவத் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து நடித்திருமையால் பெரும் வரவேற்பைப் பெற்றார். மேலும் இவர் எப்போதுமே தனது மனதில் தோன்றுவதை சொல்லும் இயல்பு கொண்டதால் சமீப காலங்களாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். இதோடு மட்டுமின்றி சில தினங்களுக்கு முன்னதாக பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட போது, பத்ம விருதாளர் என்ற முறையில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருந்தார்.
இந்நிலையில் தான், பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய போது, பிரிட்டிஷ் ஆட்சியின் தொடர்ச்சி தான் காங்கிரஸ் ஆட்சி என தெரிவித்தார். மேலும் இந்தியாவுக்கு 2014 ல் தான் உண்மையான சுதந்திரம் கிடைத்துள்ளது எனவும் 1947 ஆம் ஆண்டு கிடைத்தது பிச்சை தான் என சர்ச்சையாக பேசியிருந்தார். இப்படி பாஜகவிற்கு ஆதரவாகவும், இந்திய சுதந்திரம் குறித்து பேசியமைக்குக் கடும் கண்டனங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றனர். மேலும் இந்தியாவின் சுதந்திரம் குறித்து தேவையில்லாத கருத்துக்களை பேசியதற்காக தேச துரோக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று ஆம் ஆத்மிகட்சியின் சார்பில் மும்பையில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் பாஜகவின் எம்பியான வருண் காந்தி டிவிட்டரில், கங்கனா ரனாவத்தின் பேச்சு தேச விரோத செயல் என்று தான் அழைக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். மேலும் நாட்டின் சுதந்திரத்திற்காக ரத்தம் சித்திய அனைவருக்கும் செய்யும் துரோகம் எனவும், மங்கள் பாண்டே, ராணி லக்சுமி பாய், பக்த்சிங், சந்திரசேகர் ஆசாத், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பல சுதந்திரப்போரட்ட வீரர்களின் தியாகங்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். எனவே கங்கனா ரனாவத் இந்த பேச்சு பைத்தியக்காரத்தனம் என கூறியுள்ளார். இவருடைய கருத்துக்கு பலரும் ஆதரவினைத் தெரிவித்துவருகின்றனர்.
ஏற்கனவே கடந்த மாதம் உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் கொல்லப்பட்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு நீதி வழங்க வேண்டும் எனவும், மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப்போராடும் விவசாயிகளும் ஆதரவாகவும் வருண்காந்தி பேசியிருந்தார். இந்நிலையில் தான் மறுபடியும் பாஜகவிற்கு எதிராக வருண் காந்தி பேசியுள்ளார். மேலும் கங்கனா ரனாவத்தின் இந்தப்பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் சுதந்திரம் குறித்து விமர்ச்சித்த நடிகைக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.