ஜார்க்கண்ட் டீல் ஓகே.. ரெடியாகும் இந்தியா கூட்டணி.. ஹரியானாவில் விட்டதை ராகுல் இங்கு பிடிப்பாரா?
ஹரியானாவில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. அதனை ஜார்க்கண்டில் வெற்றி பெற்று சரி செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சிகள் ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவரும் அம்மாநில முதலமைச்சருமான ஹேமந்த் சோரன் இன்று அறிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலை தொடர்ந்து அடுத்தடுத்து சட்டப்பேரவை தேர்தல்கள் நடந்து வருகிறது. ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் இந்தியா கூட்டணியும் ஹரியானாவில் பாஜகவும் வெற்றி பெற்றது. இதற்கு அடுத்தபடியாக, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
ஜார்க்கண்டில் ரெடியாகும் இந்தியா கூட்டணி:
ஜார்க்கண்டில் இரண்டு கட்டமாக நவம்பர் 13 மற்றும் 20ஆம் தேதியும் மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரே கூட்டணியில் இணைந்து போட்டியிட இந்தியா கூட்டணி தயாராகி வருகிறது.
இதை, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவர் ஹேமந்த் சோரன் உறுதி செய்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளில் 70 தொகுதிகளில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா இணைந்து போட்டியிடும் என அவர் அறிவித்துள்ளார்.
மீதமுள்ள தொகுதிகள், மற்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட உள்ளது. இதுகுறித்து ஹேமந்த் சோரன் கூறுகையில், "தொகுதி பங்கீடு குறித்த விவரங்களுக்கு இப்போது செல்ல முடியாது. எங்கள் கூட்டணிக் கட்சி இப்போது இங்கு இல்லை. அவர்கள் இங்கு வந்ததும், மற்ற கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும் மற்றும் பிற விவரங்களையும் இறுதி செய்வோம்" என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தளம், இடதுசாரி கட்சிகள் உள்ளிட்டவை மீதமுள்ள தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கடந்த தேர்தலில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 இடங்களிலும், காங்கிரஸ் 31 இடங்களிலும் போட்டியிட்டன. ஆனால், இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு 27 முதல் 28 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராகுல் காந்தியின் திட்டம் என்ன?
அதற்கு பதிலாக, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மற்றும் மார்க்சிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழு (எம்எம்சி) ஆகியவையும் இந்தத் தேர்தலில் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிட விரும்புகின்றன.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 7 இடங்களில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளம், இந்த முறை குறைவான இடங்களில் போட்டியிடும் என்றும், பகோதர் தொகுதியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) நிர்சா தொகுதியை எம்எம்சிக்கும் வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நேற்றுதான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீடு விவரம் வெளியானது. பாஜக 68 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் (ஏஜேஎஸ்யு) 10 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் இரண்டிலும், லோக் ஜனசக்தி கட்சி (எல்ஜேபி) ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளது.
ஹரியானாவில் யாரும் எதிர்பாராத விதமாக காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. அதனை ஜார்க்கண்டில் வெற்றி பெற்று சரி செய்ய ராகுல் காந்தி திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.