மனித உருவத்தில் ஆட்டுக்குட்டி: அசாமில் ஒரு அதிசயம்! விளக்கமளித்த மருத்துவர்..
மனித முக அமைப்புடன் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
மனித முக அமைப்புடன் இறந்தே பிறந்த ஆட்டுக்குட்டி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவ்வப்போது இரு தலை ஆட்டுக்குட்டி, 8 காலுடன் கன்றுக்குட்டி என்று விலங்குகளிலும் வித்தியாசமான பிரசவங்களைப் பார்த்திருப்போம்.
பெரும்பாலும் இவ்வாறான குறைபாட்டுடன் பிறக்கும் விலங்குகள் உயிர் பிழைப்பதில்லை. பல பிறக்கும்போதே இறந்துதான் வெளியே வருகின்றன. இப்படி ஒரு சம்பவம் அசாமில் நடந்துள்ளது.
அசாம் மாநிலம் சச்சார் மாவட்டத்தில் உள்ளது கங்காபூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ஆடு வளர்த்துவந்தார். அந்த ஆட்டுக்குட்டி கர்ப்பமாக இருந்துவந்தது. அண்மையில் இது குட்டி ஈன்றது. அந்தக் குட்டி பிறக்கும்போதே இறந்துதான் பிறந்தது. ஆனால், அதன் தோற்றம் பார்ப்பதற்கு மனித முகத்தை ஒத்திருந்தது. மனிதனுக்கு இருப்பது போல் மூக்கு, கண், வாய் அமைப்பும், வட்டமான முக வடிவமும் இருந்தது. மேலும் இரண்டு கால்கள் மட்டுமே இருந்தன. காது மட்டுமே ஆட்டைப் போல் இருந்தது.
இந்த விநோத ஆட்டுக்குட்டியைப் பற்றிய தகவல் வெளியானதும் அக்கம்பக்கத்தினர் மட்டுமல்லாது, பக்கத்து கிராமத்திலிருந்து கூட மக்கள் திரண்டனர். விஷயம் வேகமாகப் பரவ இது ஊடக வெளிச்சத்துக்கும் வந்துவிட்டது.
இப்போது விநோத ஆட்டுக்குட்டியின் புகைப்படம் இணையத்தில், சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. ஒரு பக்கம் பார்க்க மனிதன் போல் இருந்தாலும், இன்னொரு பக்கம் இந்த ஆட்டுக்குட்டி ஏலியன் எஃபெக்ட் அளிக்கிறது.
இதுபோல் பல இடங்களில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. ஒருமுறை குஜராத்தில் இதே போல் மனித முகத்துடன் ஒரு ஆட்டுக்குட்டி பிறந்தது. அந்த ஆட்டுக்குட்டியை மக்கள் கடவுளின் அவதாரம் எனக் கூறி வழிபடத் தொடங்கினர்.
இதனை மூடநம்பிக்கை எனக் கூறுகின்றனர் கால்நடை மருத்துவர்கள். சிலர் விலங்குடன் மனிதன் உறவு கொண்டால் இவ்வாறாக குட்டிகள் உருவாகும் எனக் கூறுகின்றனர். ஆனால், ஆடு, மனிதன் இரண்டுமே வெவ்வேறு இனம் என்பதால் அப்படியான இனப்பெருக்கத்துக்கே சாத்தியமில்லை எனக் கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
இந்த குறிப்பிட்ட ஆட்டுக்குட்டி குறித்து மருத்துவர் டாக்டர் சவுத்ரி கூறுகையில், மனித முகம் கொண்ட இந்த ஆட்டுக்குட்டி பிறவிக் குறைபாட்டால் இவ்வாறாக இருக்கிரது. கால்நடைகளில் ‘Fetal Anasartha’ (or Anasarca) கருவில் ஏற்படும் குறைபாட்டால் இத்தகைய தோற்றம் ஏற்படுகிறது. கருவில் நீர்கோர்த்து அவை முகம், கால்கள் என பகுதிகளை வீங்கச் செய்யும். அப்படித்தான் இந்த ஆட்டுக்குட்டியின் முகம் வீங்கியுள்ளது என்று கூறியுள்ளார்.
இதை கிராம மக்கள் புரிந்து கொண்டால் மூடநம்பிக்கையைத் தவிர்க்கலாம்.