Delhi Crime : "வருத்தம்லா இல்ல... அவ என்ன வேணாம்னு சொன்னா" டெல்லி சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி பரபரப்பு வாக்குமூலம்!
தலைநகர் டெல்லியில் ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் மிகவும் கொடூரமான ஒரு படுகொலை சம்பம் நடந்துள்ளது. 16 வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், தேசிய தலைநகர் டெல்லியில் மற்றொரு கொடூரம் அரங்கேறியுள்ளது. ஷ்ரத்தா கொலை வழக்கு ஏற்படுத்திய அதிர்ச்சியே தணியாத சூழலில், 16 வயது சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
20 முறை குத்திக்கொலை:
டெல்லி ஷஹபாத் டெய்ரி என்ற பகுதியில் 16 வயது சிறுமியை சாஹில் என்ற 20 வயது இளைஞர் சரமாரியாக தாக்கியுள்ளார். தெருவில் இருவரும் பேசிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு இளைஞர் சாஹில் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த சிறுமியை குத்தியுள்ளார்.
ஆத்திரம் தாங்காமல் மீண்டும் அந்த சிறுமியை ஈவு இரக்கமின்றி சுமார் 20 முறை கொடூரமாக குத்தியுள்ளார். இதனால் அந்த சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.பின்னர், அந்த இடத்தில் இருந்து சற்று தூரம் சென்ற இளைஞர், ஆத்திரம் தீராததால் மீண்டும் ஓடி வந்து அருகில் கிடந்த கல்லை எடுத்து அந்த சிறுமி மீது போட்டுள்ளார்.
இந்த சம்பவம் நடக்கும்போது பலரும் அந்த வழியாக செல்கின்றனர். ஆனால் ஒருவர் கூட அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தப்படி நின்றுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படுகொலை சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் இணையத்தை அதிர வைத்துள்ளது. இதனை அடுத்து கொலை செய்த இளைஞரை போலீசார் நேற்று உத்தர பிரதேசத்தில் வைத்து கைது செய்தனர்.
பகீர் வாக்குமூலம்
நேற்று கைது செய்யப்பட்ட இளைஞர் சாஹிலிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் அவர் சில திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
அதன்படி, ”நானும் அந்த சிறுமி நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். ஒரு கட்டத்தில் நானும் அந்த சிறுமியும் டேட்டிங்கில் இருந்தோம். சுமார் 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ள நிலையில், எங்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. அதுவும் அந்த சிறுமி வேறொரு நண்பருடன் பேசி வந்துள்ளார். இதனால் எங்கள் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.
இதனால் அந்த சிறுமி என்னுடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இதுபற்றி நான் அவரிடம் கேட்டபோது என்னிடம் பேச வேண்டாம் என்று கூறினார். ஆனாலும் நான் அவரிடம் தொடர்ந்து பேச வேண்டும் என்று வற்புறுத்தினேன். ஆனால் அவர் என்னிடம் பேசாமல் இருந்துள்ளதோடு, தன்னை தொந்தரவு செய்தால் காவல்நிலையத்தில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்று மிரட்டினார். இதனால் எனக்கு கடும் கோபம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் அவளை கொலை செய்த முடிவு எடுத்ததாக” வாக்குமூலத்தில் கூறினார்.
விசாரணை காவல்:
இதனை அடுத்து, ”நான் அந்த சிறுமியை ஆத்திரத்தில் 20 முறை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு உத்தரபிரதேசத்திற்கு தப்பிச் சென்றாக" சாஹில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இதற்கிடையில் 16 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் கைதான சாஹிலை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.