பிரபல ஓட்டல் அறையில் ரகசிய கேமரா... மர்ம கும்பல் செய்த காரியம்...என்ன நடந்தது..?
இந்த கும்பல், தம்பதிகளை மிரட்டி பணம் தராவிட்டால் வீடியோக்களை வெளியிடுவதாக அச்சுறுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபல ஹோட்டல் அறையில் ரகசிய கேமராக்களை வைத்து அங்கு தங்கியவர்களின் அந்தரங்க தருணங்களை பதிவு செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த அறையை, அந்த கும்பல் ஓயோ செயலி மூலம் புக் செய்துள்ளனர்.
இந்த கும்பல், தம்பதிகளை மிரட்டி பணம் தராவிட்டால் வீடியோக்களை வெளியிடுவதாக அச்சுறுத்தி இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த மோசடியில் ஹோட்டல் ஊழியர்கள் ஈடுபடவில்லை என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. முதலில், இந்த கும்பல் பிரபல ஹோட்டலில் புக் செய்து தங்கியுள்ளதாகவும் பின்னர், அங்கிருந்து வெளியேறுவதற்கு முன்பு அங்கு ரகசிய கேமராவை விட்டுவிட்டு சென்றுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில நாள்களுக்கு பிறகு, அவர்கள் தங்கியிருந்த அதே அறையில் மீண்டும் புக் செய்து தங்குவது போல நடித்து அந்த கேமராவை எடுத்து சென்றுள்ளனர். இறுதியாக, அந்த கேமராவில் பதிவாகியுள்ள தம்பதிகளை தொடர்பு கொண்டு மிரட்டியுள்ளனர். விஷ்ணு சிங், அப்துல் வஹாவ், பங்கஜ் குமார், அனுராக் குமார் சிங் ஆகிய நான்கு பேர் நொய்டாவில் செயல்படும் மூன்று வெவ்வேறு கும்பல்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த கும்பல், அங்கீகரிக்கப்படாத கால் சென்டர்கள், சட்டவிரோத செயல்களுக்கு போலி சிம்கார்டுகளை வழங்குதல் உள்ளிட்ட பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். 11 மடிக்கணினிகள், 21 மொபைல்கள், 22 ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கும்பல் நாடு முழுவதும் செயல்படுவதாக கூறப்படுகிறது. கும்பலைச் சேர்ந்த ஒருவர் தலைமறைவாக உள்ளதால், அவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து மூத்த காவல்துறை அலுவலர் சாத் மியான் கான் கூறுகையில், "தம்பதியினரின் தொலைபேசிக்கு அவர்களது அந்தரங்க வீடியோக்களை அனுப்பி அவர்களிடம் பணம் கேட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் வீடியோக்களை ஆன்லைனில் வெளியிடுவதாக குற்றம் சாட்டப்பட்ட விஷ்ணு மற்றும் அப்துல் வஹாவ் மிரட்டினர்.
மூன்றாவது குற்றம்சாட்டப்பட்டரான பங்கஜ், மற்ற நபர்களின் பெயரில் சிம் கார்டுகளை வாங்கி அதை குற்றம்சாட்டப்பட்டவருக்கு வழங்கியுள்ளார். அவர்களிடம் இருந்து 11 மடிக்கணினிகள், 7 சிபியுக்கள், 21 மொபைல்கள், பல்வேறு வங்கிகளின் 22 ஏடிஎம் கார்டுகள், ஒரு பான் கார்டு, ஒரு ஆதார் கார்டு, ஏராளமான போலி ஆவணங்கள், ஐ கார்டு, சிம்கார்டு ஆகியவை மீட்கப்பட்டன. அவரது கூட்டாளிகளில் ஒருவர் இன்னும் தலைமறைவாக உள்ளார்" என்றார்.
இந்த சம்பவம் குறித்து ஓயோ விசாரணையை தொடங்கியுள்ளதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.