கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரம்.. குஜராத் சக்ஸஸ் ஸ்டோரிக்கு காரணம் இதுதான்! அமித் ஷா பளீச்
கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதில் குஜராத் அரசு முன்னோடியாக இருந்தது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சியில் குஜராத் இன்று முக்கிய பங்கு வகிப்பதுடன், உலகப் பொருளாதாரத்தின் நுழைவாயிலாகவும் உருவாகி வருவதாக அவர் கூறியுள்ளார்.

குஜராத் வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் வருடாந்திர வர்த்தக கண்காட்சி 2025இன் தொடக்க அமர்வில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு அமைச்சருமான அமித் ஷா இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நமது மிகப்பெரிய சொத்து என்று குறிப்பிட்ட மத்திய அமைச்சர் அமித் ஷா, நாம் திரும்பிப் பார்த்தால், ஒவ்வொரு பெரிய தொழிலும் ஒரு காலத்தில் சிறிய அளவிலான தொழிலாகத்தான் தொடங்கப்பட்டிருந்தன என்றார்.
குஜராத் சக்ஸஸ் ஸ்டோரி:
நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு குஜராத்தின் சிறு தொழில்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அமித் ஷா கூறினார். குஜராத் தொழில், வர்த்தக சபை சிறு தொழில்களின் பாரம்பரியத்தை புத்தொழில் நிறுவனங்களுடன் ஒருங்கிணைத்து, இளைஞர்களுக்கு ஒரு விரிவான சூழல் சார் அமைப்பை உருவாக்கும் பொருட்டு நவீனமயமாக்க வேண்டும் என்று கூறினார்.
அரசுக்கும், சிறு தொழில்களுக்கும், வளரும் இளம் தொழில்முனைவோர்களுக்கும் இடையே பாலமாக வர்த்தக சபை செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். பாரம்பரியத் தொழில்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முன்னோடி துறைகள் வரை பல்வேறு துடிப்பான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட தொழில்துறை சூழல்சார் அமைப்பை குஜராத் இன்று காட்சிப்படுத்துகிறது என்று அமித் ஷா கூறினார்.
குஜராத்தில் தொழிற்சாலைகளை நிறுவ விரும்பும் தொழில்முனைவோருக்கு வர்த்தக நட்பு, அரசியல் தலையீடு இல்லாத, திறமையான அமைப்புகள் மற்றும் வேலைநிறுத்தம் இல்லாத சூழல் ஆகியவை உறுதி செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
"கிராமங்களில் 24 மணி நேரமும் மின்சாரம்"
மோடி முதலமைச்சராக இருந்த காலத்தில், வர்த்தகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களுடன் அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபட்டு, அனைவரையும் உள்ளடக்கி முடிவெடுப்பதற்கு குஜராத் அரசு முன்னுரிமை அளித்ததை அமித் ஷா நினைவுகூர்ந்தார்.
தொழில் துறைக்கு ஆதரவான சூழலை முதலமைச்சர் பூபேந்திர படேல் மேலும் வலுப்படுத்தியுள்ளார் என்று அவர் குறிப்பிட்டார். வலுவான உள்கட்டமைப்புதான் வலுவான பொருளாதாரத்தின் அடித்தளம் என்றும், வலுவான பொருளாதாரம் அதன் மூலம் ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் என்ற மோடியின் தொலைநோக்குக் கொள்கையை அவர் எடுத்துரைத்தார்.
இதன் விளைவாக, இந்தியாவின் வளர்ச்சியில் குஜராத் இன்று முக்கிய பங்கு வகிப்பதுடன், உலகப் பொருளாதாரத்தின் நுழைவாயிலாகவும் உருவாகி வருகிறது என்று அவர் தெரிவித்தார். ஸ்மார்ட் உள்கட்டமைப்பு என்ற கருத்து முதன்முதலில் குஜராத்தில்தான் உருவானது என்றும், கிராமங்களில் 24 மணி நேர மின்சாரம் வழங்குவதை உறுதி செய்வதில் மாநில அரசு முன்னோடியாக இருந்தது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

