Crude Oil Import: அமலுக்கு வரும் அமெரிக்க வரி; 18 மாதங்களில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவு
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் அமலுக்கு வரும் நிலையில், கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் இறக்குமதி சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யாவுடன் இந்தியா வர்த்தகம் செய்வதை சுட்டிக்காட்டி, 50 சதவீத வரியை விதித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த வரிகள், நாளை நள்ளிரவு முதல் அமலுக்கு வர உள்ளது. இப்படிப்பட்ட சூழலில், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்து தற்போது பார்க்கலாம்.
ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.7% சரிவு
இந்தியாவிற்கான வரியை அமெரிக்கா ஏற்கனவே அறிவித்துவிட்ட நிலையில், கடந்த ஜூலை மாதத்தில், நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளதாக, மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கடந்த ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி 8.70 சதவீதம் குறைந்து, 1.86 கோடி டன்னாக இருந்ததாக மத்திய அரசு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குப் பின்னர், இதுவே குறைந்தபட்ச இறக்குமதி என தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடும் போது, இறக்குமதி 4.30 சதவீதம் குறைந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
பெட்ரோலிய பொருட்களின் இறக்குமதி 12.80% சரிவு
அதே நேரத்தில், கடந்த மாதம் பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி, 12.80 சதவீதம் சரிந்து, 43.10 லட்சம் டன்னாகவும், ஏற்றுமதி 2.10 சதவீதம் குறைந்து, 50.20 லட்சம் டன்னாகவும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நுகர்வை பொறுத்தவரை, 4.30 சதவிதம் குறைந்து, 1.94 கோடி டன்னாக இருந்தது.
வரி விதிப்பு காரணமாக இறக்குமதி குறைவு
இந்த இறக்குமதி குறைவிற்கு, இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகளே காரணமாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. நாளை நள்ளிரவு முதல் வரிகள் அமலுக்கு வர உள்ள நிலையில், இந்திய நிறுவனங்கள், எந்த நாட்டில் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைக்கிறதோ, அந்த நாட்டிலிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா பிடிவாதம்
மறுபுறம், அமெரிக்காவும் வரி விதிப்பில் பிடிவாதமாக உள்ளது. இந்திய பொருட்கள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் 25 சதவீத வரியை நிறுத்தி வைக்க அமெரிக்கா தயாராக இல்லை என்பதை உறுதி செய்யும் வகையில், நாளை முதல் வரி அமலுக்கு வருவதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 6-ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பால் கையெழுத்திடப்பட்ட உத்தரவை நாளை நள்ளிரவு முதல் அமல்படுத்துவதாக, அமெரிக்க சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு மூலம், உள்நாட்டு பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், இந்திய பொருட்களின் ஏற்றுமதி மீது விதிக்கப்பட்ட கூடுதல் 50 சதவீத வரி, நாளை முதல் அமலுக்கு வருகிறது.




















