Prakash Raj: சிறந்த நடிகர் மோடிதான்.. பிரதமரை காட்டமாக விமர்சித்த பிரகாஷ் ராஜ்
பிரதமர் மோடி மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மெண்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மெண்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறார் என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
பிரதமர் மோடியை நடிகர் பிரகாஷ் ராஜ் மிகச்சிறந்த நடிகர் என விமர்சித்துள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நடிப்பைத் தாண்டி பிரகாஷ் ராஜ் கடந்த சில ஆண்டுகளாக தன் பாஜக எதிர்ப்பு கருத்துகளை வெளிப்படையாக முன்வைத்து அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பைக் கிளப்பி வருகிறார். குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வரும் பிரகாஷ் ராஜ், இதற்காக கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறார்.
தன் நண்பரும் எழுத்தாளருமான கௌரி லங்கேஷ் படுகொலைக்குப் பிறகு அரசியலில் தீவிரமாக நுழைந்த பிரகாஷ் ராஜ், கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பெங்களூருவில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.
அதன் பின் நேரடி அரசியலில் இருந்து விலகி இருக்கும் பிரகாஷ் ராஜ், தன் அரசியல் கருத்துகளையும், விமர்சனங்களையும் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.
அந்த வகையில் அவர் தனியார் செய்தி நிறுவனத்துக்கு சமீபத்தில் அளித்துள்ள நேர்க்காணலில் பிரதமர் மோடியை விமர்சித்துப் பேசியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் “நீங்களும் நடிகர் கமல்ஹாசனும் மிகச்சிறந்த நடிகர்களாக இருந்தும் அரசியலில் தோற்று இருக்கிறீர்கள். அப்படியென்றால் உங்களை விட சிறந்த நடிகர்கள் அரசியலில் இருக்கிறார்களா?” என செய்தியாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ், “மோடி இருக்கிறார். அவர் மிகச்சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த பெர்ஃபார்மர், காஸ்ட்யூம் டிபார்ட்மெண்ட், ஹேர்ஸ்டைல் டிபார்ட்மெண்ட் என எல்லாவற்றையும் அவர் வைத்திருக்கிறாரே” என பிரகாஷ் ராஜ் பேசியுள்ளார்.
பிரகாஷ் ராஜின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.
சந்திராயன் சர்ச்சை
முன்னதாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் -3 விண்ணில் ஏவப்பட்டபோது அவரது பதிவு ஒன்று இணையதளத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது. நிலவின் மேற்பரப்பு புகைப்படங்களை எடுத்து சந்திராயன் அனுப்பியபோது நடிகர் பிரகாஷ் ராஜ் விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகைப்படம் என கேலிச்சித்திரம் ஒன்றை தன் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தார்.
டிவீட்டில், நபர் ஒருவர் சுற்றி வளைத்து டீ ஆத்தும் கார்ட்டூன் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “ப்ரேக்கிங் செய்தி, விக்ரம் லேண்டர் எடுத்த முதல் புகைப்படம்” என பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து பிரகாஷ் ராஜின் ட்விட் பா.ஜ.க, பிரதமர் மோடி, இந்திய நாட்டை அவமதிக்கும் வகையில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வந்தனர். மேலும், விஞ்ஞானிகளின் உழைப்பை கேவலப்படுத்துவதோடு மதிப்பற்ற வகையில் ட்விட் உள்ளதாக பலரும் கமெண்ட் செய்து வந்தனர். கண்மூடித்தனமான வெறுப்பு இவர்களை நாட்டின் சாதனைகளைக் கூட காண விடாமல் செய்கிறது” என்றும், “சந்திரயான் 3 இஸ்ரோவால் அனுப்பப்பட்டது பாஜகவால் அல்ல” என்றும் நெட்டிசன்கள் கடுமையாக பிரகாஷ் ராஜின் பதிவுக்கு விமர்சனங்களை முன்வைத்தனர். அவரின் ட்விட்டிற்கு பலரும் கமெண்ட் செய்தனர்.