Post Independence Verdicts: இந்திய சுதந்திரத்திற்கு பிறகு வழங்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகள்..
இந்திய நாட்டில், நீதிமன்றத்தின் சில தீர்ப்புகள் நாட்டின் போக்கை புதிய பாதைக்கு எடுத்துச் சென்றனர்.
நீதிமன்றம் சில தீர்ப்புகள் மூலம் ஜனநாயகத்தின் கூறுகளை நிலைநிறுத்தி , அரசு அதன் நிர்வாகத்தின் எல்லையை மீறி செயல்படாமல் பாதுகாத்தது.
கேசவானந்த பாரதி வழக்கு 1973:
1973 ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சிக்ரி உள்ளடக்கிய 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கியது. இந்திய அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பை மாற்ற முடியாது என தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பின்படி அடிப்படை உரிமைகளை மீறி எந்த ஒரு சட்டத்தையும் நாடாளுமன்றமோ சட்டமன்றமோ சட்டம் இயற்ற முடியாது என தீர்ப்பு வழங்கியது.
மேலும் நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ அடிப்படை உரிமைகளை மீறி செயல்படும் போது, நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பு வழங்கியது. மேலும் கூட்டாட்சி,மதச் சார்பின்மை, அதிகார பங்கீடு, நீதிமன்றம், நிர்வாகம் உள்ளிட்டவற்றை திருத்தி அமைக்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.
எஸ்.ஆர். பொம்மை வழக்கு :
1994 ஆம் ஆண்டு எஸ்.ஆர் .பொம்மை வழக்கில், குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி மாநில அரசை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது நீதிமன்றத்தின் மேற்பார்வைக்கு உட்பட்ட செயல் என்றும், தீய உள்நோக்கத்துடன் கலைக்கப்பட்டு இருக்குமெனில் கலைக்கப்பட்ட ஆட்சியை மீண்டும் கொண்டுவர, நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு பிறகு மாநில அரசுகளை கலைக்கும் நடைமுறை வெகுவாக குறைந்தது.
இந்திரா ஷாஹ்னி வழக்கு:
இந்திரா ஷாஹ்னி வழக்கானது,இந்தியாவின் இட ஒதுக்கீடு வரலாற்றில் முக்கிய தீர்ப்பாக அமைந்தது. இந்த தீர்ப்பின்படி மத்திய அரசு வேலைகள் மற்றும் கல்லூரிகளில் சேர்க்கையின்போது, இட ஒதுக்கீட்டில் 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்றும், சமூக ரீதியில் பின்தங்கி இருப்பவர்களை உறுதி செய்ய ஜாதியே அடிப்படையாக எடுத்துக்கொள்ளப்படும் என்றும், பொருளாதாரம் எடுத்து கொள்ளப்படாது என உறுதி செய்யப்பட்டது. இட ஒதுக்கீடு வழங்கும் போது பிற்படுத்தப்பட்டவர்களில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் எனபதற்காக வழங்க கூடாது என தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டது.
விசாகா வழக்கு:
1997 ஆம் ஆண்டு பணி புரியும் பெண்களுக்கு பாதுகாப்பு தொடர்பான உச்ச நீதிமன்றம், தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பின்படி பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள்,வன்முறைகள், சீண்டல்களை தடுத்திட வேண்டி, அனைத்து நிறுவனங்களில் விசாகா என்னும் பெயரில் குழு அமைத்திட உத்தரவிட்டது. இந்த தீர்ப்பின்படி பணியிடத்தில் பணிபுரியும் பெண்களுக்கான பாலியல் வன்முறைகளை தடுத்திட சட்டம் கொண்டு வரப்பட்டது. பாலியல் தொல்லை துன்புறுத்தல் என்பது உடல் ரீதியான தொடர்பு மட்டும் இல்லை என வாய் மொழிச் சொற்களும் இதில் தொடங்கும். அதையடுத்து விசாகா குழுவில் இடம் பெறும் உறுப்பினர்கள் மற்றும் செயலபடும் முறைகள் உள்ளிட்டவை குறித்து சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.