(Source: ECI/ABP News/ABP Majha)
தமிழ் புதல்வன் திட்டத்திற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று பெயர் வையுங்கள் - திமுகவை சாடிய சீமான்
தமிழ் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா அரூரில் சீமான் கேள்வி.
தருமபுரி மாவட்டம் அரூரில் உலகப் பழங்குடியினர் தினத்தையொட்டி, நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இந்தப் பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான்,
நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகிறது. நாங்கள் காசு கொடுத்து கூட்டத்தை கூட்டவில்லை. கோடிக் கணக்கில் பணத்தை கொடுத்து வாக்குகளை பெறவில்லை. ஒரு தேர்தலில் 17 லட்சம் வாக்குகள் பெற்றோம். அடுத்த தேர்தலில் 30 லட்சம், இந்த தேர்தலில் 35 லட்சம் வாக்குகளை பெற்றிருக்கின்றோம். இந்த வாக்குகள் படிப்படியாக அதிகரிக்கும்.
வாக்குகளுக்காக கோடி கோடியாய் செலவு செய்யும் திமுக
ஒரு கோடிக்கு மேல் வாக்குகளை வாங்குவோம். ஆனால் இங்கு திமுக முதலமைச்சர், அமைச்சர் அப்பன், மகன் இருவரும் இணைந்து கூட கோடி கோடியாய் செலவு செய்கிறார்கள். ஆனால் கூட்டத்தைக் கூட்ட முடியவில்லை. காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் நான் கட்சியை கலைத்துவிட்டு செல்கிறேன். இந்த சீமானுக்கு யார் 35 லட்சம் ஓட்டுக்களை போடுகிறார்கள் என எண்ணித்தான், கல்லூரி படிக்கின்ற இளைஞர்களும், இளம்பெண்களும் வாக்களிக்கிறார்கள்.
இளைஞர்களின் வாக்குகளைப் பெறவே தமிழ் புதல்வன் திட்டம்
அவர்களின் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காகவே, இன்று தமிழ் புதல்வன் திட்டம் தொடங்கி இருக்கிறார்கள். பெண்களுக்கு மகளிர் உரிமை திட்டம், கல்லூரி படிக்கும் இளம் பெண்களுக்கு புதுமைப்பெண் திட்டம், இன்று இளைஞர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் இதன் மூலம் எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கி சீமானுக்கு விழுகின்ற வாக்குகளை பெற வேண்டும் என திமுக அரசு திட்டங்களை வகுத்து வருகிறது. இது ஆயிரம் ரூபாய் அரசு என்றுதான் சொல்ல வேண்டும்.
திராவிட மாடல் அரசு என்று சொல்லுகின்றார்கள். ஏன் தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என பெயர் வைக்கிறார்கள். முடிந்தால், திராவிட புதல்வன் திட்டம், திராவிட மகளிர் உரிமைத் திட்டம் என பெயர் வையுங்கள் பார்க்கலாம். பக்கத்து மாநிலம் ஆந்திராவை சார்ந்த வனத் துறையினர் தமிழ்நாட்டில் உள்ள பூர்வ குடிகளை சேர்ந்த பழங்குடியின பெண்களை தூக்கிச் சென்று கொடூரமாக தாக்குவது, பிறப்பு உறுப்புகளில் மிளகாய் பிடியை தூவுகிறார்கள்.
இதைக் கூட கேட்பதற்கு திராணி இல்லை, இந்த திராவிட மாடல் அரசுக்கு. இதுவே இந்த அண்ணன் சீமான் ஆட்சி செய்திருந்தால் அவர்களைப் பிடித்து மிளகாய் பிடியை தூவி இருப்பேன். நாம் தமிழர் கட்சியை, பாரத் பாஜகவின் பி டீம் என சொல்கிறார்கள். கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு நாணயம் வெளியிடப் போகிறார்கள். அதனை ராஜ்நாத் சிங் வெளியிடப் போகிறார். அப்பொழுது இந்த மெயின் டீம் மேடையில் என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம்.
தலை குனிந்து நிற்கப் போகும் திமுக
எல்லோரும் அப்பொழுது தலை குனிந்து நிற்பார்கள். திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என சீமான் தெரிவித்தார். அரூர் பகுதியில் தொடர்ந்து மழை பெய்ததால் கொட்டும் மழையிலும் சீமான் உரையாற்றினார் தொண்டர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டத்தில் அமர்ந்திருந்தனர்.