ஒரு நாட்டின் பிரதமர் இயற்கை சீற்றத்தின்போது அரசியல் செய்வது நாகரீகம் அல்ல - முத்தரசன் ஆவேசம்
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ-வும், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க கவுரவ தலைவருமான ந.நஞ்சப்பன் எழுதிய, ‘விடியலை நோக்கி பழங்குடி மக்கள்’ மற்றும் ‘பழங்குடிகள் பற்றிய பார்வையும் பாதையும்’ என்ற நூல்கள் வெளியீட்டு விழா நேற்று தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இந்நிகழ்ச்சியில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் இரா.முத்தரசன் பங்கேற்று இந்த நூல்களை வெளியிட்டார்.
முன்னதாக, செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் முத்தரசன், வயநாடு நிலச்சரிவு சம்பவத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், வயநாட்டில் கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்டுள்ள இந்த பேரிடரால் பல குடும்பங்கள் உயிரிழந்து, உடமை இழந்து தவித்து வருகிறது. மீட்புப் பணிகளில் மாநில அரசும், ராணுவமும் சிறப்பாக பணியாற்றியது. கேரள மாநிலம் வயநாடு இயற்கை சீற்ற சம்பவத்தால் நாடே துயரத்தில் உள்ளது. இதை கேரள மாநிலத்தின் ஒரு மூலையில் நடந்த சம்பவமாக கருதாமல் நாட்டுக்கே ஏற்பட்ட பேரிழப்பு என நாட்டு மக்கள் கருதுகின்றனர்.
வயநாடு பாதிப்பு ராணுவ வீரர்கள் வேதனை
மீட்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ தலைமை அதிகாரி, தன் வாழ்நாளில் இப்படியொரு சோகத்தை பார்த்ததே இல்லை என்று குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் கட்சி பேதமின்றி இச்சம்பவம் குறித்து அனைத்து உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.
நிலச்சரிவைப் பார்வையிட்ட பிரதமர்
இந்நிலையில், 10.08.2024 அன்று வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் நரேந்திரமோடி நேரில் பார்வையிட்டார். அங்கு ஏற்பட்டுள்ள அனைத்து பாதிப்புகள் குறித்தும் பிரதமர் நன்றாக அறிவார். அவர் பார்வையிட்ட பிறகு இச்சம்பவத்தை தேசிய பேரிடர் என அறிவித்து அதற்கான நிவாரண உதவிகளையும் அறிவிப்பார் என கேரளா மட்டுமன்றி நாடே எதிர்பார்த்தது.
ஆறுதல் மட்டுமே கூறிவிட்டு சென்ற பிரதமர்
ஆனால், பிரதமர் வந்து பார்வையிட்டார். முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். வேண்டிய உதவிகளை செய்யுங்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டார். இன்னும் 10 நாட்களில் என்ன அறிவிப்பு வரும் என தெரியவில்லை. ஒரு நாட்டின் பிரதமர் இவ்வாறு அலட்சியம் காட்டுவது, அரசியல் பாகுபாடு காட்டுவது நல்லதல்ல.
இயற்கை சீற்றத்தின்போது அரசியல் செய்வது நாகரிகம் அல்ல. அரசியல் செய்வதற்கு பல்வேறு இடங்கள் உள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோதும் மத்திய அரசு சார்பில் அமைச்சர்கள் மற்றும் குழுவினர் வந்து பார்வையிட்டனர்.
தேசிய பேரிடராக அறிவித்து கேரளா அரசுக்கு மத்திய அரசு உதவிகளை செய்ய வேண்டும்
ஆனாலும், எவ்வித பயனும் இல்லை. வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பை தேசிய பேரிடராக உடனே மத்திய அரசு அறிவிப்பதுடன், கேரளா அரசு கோரியுள்ள நிவாரண உதவிகளை மத்திய அரசு கொடுக்க வேண்டும்.தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. குஜராத்தில் இருந்து போதை பொருட்கள் இறக்குமதி ஆவதை மத்திய அரசு தடுத்தால் தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதிலும் போதை பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டுவிடும்.
இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில், பாண்டிச்சேரி முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், அரசு பழங்குடியினர் ஆய்வு மைய முன்னாள் இயக்குநர் முனைவர் மகேஸ்வரன், பழங்குடி மக்கள் ஆய்வு மைய மானுடவியல் ஆய்வாளர் முனைவர் தமிழ் ஒளி, தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநில தலைவர் கெம்பன், மாநில செயலாளர் பரமசிவம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.