காவிரி உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப ஒகேனக்கல் உபநீர் திட்டம் நிறைவேற்ற அரசுக்கு பரிந்துரை
காவிரி உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப ஒகேனக்கல் உபநீர் திட்டம் நிறைவேற்ற மாவட்ட நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலத்தில் வீணாக செல்லும் உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் 8 அணைகள் 74 பொதுப்பணித்துறை ஏரிகள் 640க்கும் மேற்பட்ட ஊரகத்துறை கட்டுப்பாட்டில் ஏரி, குளங்கள் உள்ளன. மாவட்டத்தின் வழியாக ஒகேனக்கல், காவிரி ஆறு, தென்பெண்ணை ஆறு செல்கிறது. ஆனால் இந்த ஆறுகளால் மாவட்ட விவசாயத்திற்கு எந்த பயனும் இல்லை. வானம் பார்த்த பூமியான மாவட்டத்தில் மழை பெய்தால் மட்டும் விவசாய பணிகள் நடக்கும் இல்லை என்றால் வறட்சியாக காணப்படும்.
ஒவ்வொரு ஆண்டு மழை காலத்தில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலில் கலக்கிறது. மழைக்காலத்தில் வீணாக கடலில் கலக்கும் மூன்று டிஎம்சி தண்ணீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என தர்மபுரி மாவட்ட விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி 10 லட்சம் கையெழுத்து இயக்கம் நடந்தது.
இந்த கோரிக்கையை ஏற்று கடந்த கால ஆட்சியில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் செயல்படுத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன் பின்னர் கிடப்பில் போடப்பட்டது. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தர்மபுரி மாவட்டம் மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அந்த கோரிக்கையை ஏற்று அரசின் பார்வைக்கு ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால் அதற்கான உத்தரவு இதுவரை வரவில்லை தமிழக அரசு ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் செயல்படுத்தும் என நம்பிக்கையில் மாவட்ட விவசாயிகள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி 1.60 லட்சம் கன அடி தண்ணீர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடியது. இதை அடுத்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கனமழை காலங்களில் கடலுக்கு சென்று வீணாகும் தண்ணீரை தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளுக்கு வழங்கி விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் ஒகேனக்கல் உபரி நீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி மாவட்ட கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் சிறிதளவே னும் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. ஆனால் அந்த நிலத்தில் நம்பிக்கையுடன் விவசாயம் செய்யும் அளவுக்கு நீர் வளம் இல்லை. வானம் பார்த்த பூமியாக உள்ள இந்த நிலங்களில் மழைக்காலங்களில் மட்டும் ஒரு போகம் மாணவரி சாகுபடி செய்ய முடிகிறது.
இதன் மூலம் பொருளாதார தேவைகள் நிறைவேறுவதில்லை என்பதால் பெரும்பாலான குடும்பங்களில் வயது முதிர்ந்தவர்கள் மட்டுமே கிராமங்களில் உள்ளனர்.
மற்றவர்கள் பிழைப்பு தேடி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கூலி வேலை செய்கின்றனர். இவர்களின் குழந்தைகள் கிராமத்திலேயே முதியவர்களுடன் வளர்க்கின்றனர். இங்கு தான் சமூக சிக்கல் உருவாகிறது. பெற்றோர்கள் கண்காணிப்பு இல்லாத நிலையில் முதியவர்களை ஏமாற்றி குழந்தைகள் வழி தவறி சென்று விடக்கூடாது என்பதற்காக அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக் கல்வியுடன் அவர்களுக்கு மணமுடித்து வைக்கின்றனர்.
குறிப்பாக பெண் குழந்தைகள் உயர்கல்விக்கு செல்ல முடியாமலேயே மணவாழ்வில் தள்ளப்படுகின்றனர். சொந்த நிலத்தில் ஆண்டு முழுக்க விவசாயம் செய்திட தண்ணீர் வசதி இருந்தால் வெளி மாநிலங்களில் தங்கி உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சொந்த ஊருக்கு திரும்பி விடுவார்கள் அவர்கள் தங்கள் நிலத்தை கொண்டு வாழ முடியும்
தண்ணீர் தேவைக்காக ஆயிரம் அடி வரை ஆழ்குழாய் கிணறு அமைக்கும் நிலை உள்ளது உபரி நீர் திட்டம் வந்துவிட்டால் 50 அடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும் கனமழை காலங்களில் அதிகமான டிஎம்சி தண்ணீர் கடலுக்குள் செல்கிறது வெறும் 3 டிஎம்சி தண்ணீர் இருந்தால் இந்த திட்டம் மூலம் தர்மபுரி மாவட்ட நீர்நிலைகளை நிறைத்து விட முடியும் இத்திட்டத்திற்காக கன மழை கால உபரி நீர் மட்டுமே எடுக்கப்படும் என்பதால் டெல்டா மாவட்டங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக்காலத்தில் ஏற்படும் வெள்ள உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகளுக்கு பம்பிங் மூலம் நிரப்புவதற்கு ஒகேனக்கல் உபரி நீர் திட்டம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை" என்றனர்.