ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை ஒரு கோடி பனை விதைகள் நடும் பணி வரும் 8ல் ஆரம்பம்
ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை நடும்பனி வரும் எட்டாம் தேதி தொடங்குகிறது.
ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை நடும்பனி வரும் எட்டாம் தேதி தொடங்குகிறது.
இது குறித்து முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நேற்று நடந்தது
"மரங்களின் இளவரசி" பனைமரம் அழைக்கப்படுகிறது
பனை மரங்கள், மரங்களின் "இளவரசி" என அழைக்கப்படுகிறது. ஆய்வாளர்களின் கணக்கெடுப்பு படி தமிழ்நாட்டில் முன்பு 50 கோடி பனை மரங்கள் இருந்தது. தற்போது நான்கு முதல் ஐந்து கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 50 சதவீத பனை மரங்கள் உள்ளன.
ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை
சென்னை, செங்கல்பட்டு, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் சுமார் 20 சதவீத மரங்கள் உள்ளன. ஒரு பனைமரம் 15 மீட்டர் உயரத்தை அடைய 10 ஆண்டுகள் ஆகும். பனை மரத்தின் அதிகபட்ச உயரம் சுமார் 30 மீட்டர் ஆகும். நிலத்தடி நீரை தக்க வைப்பதில் பனை மரங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம்
இதனால் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி பனை மரங்களை வேருடன் அகற்ற தமிழக அரசு தடை விதித்துள்ளது. அமெரிக்கா, ஜப்பான், இத்தாலி, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு பனைப் பொருட்கள் இந்திய அளவில் இருந்தும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதன் வர்த்தக மதிப்பு ரூ.200 கோடி ஆகும்.
பனையிலிருந்து கிடைக்கும் பத நீரை காய்ச்சினால் பனைவெல்லம் என்ற கருப்பட்டி கிடைக்கிறது. இது சிறந்த மருத்துவ குணம் கொண்டது. சூறாவளி காற்றையும் தாங்கி நிற்கும் ஆற்றலை பனைமரம் பெற்றுள்ளது. தர்மபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி கரையோரத்தில் ஒரு கோடி பனை விதைகளை விதைக்க தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒகேனக்கலில் 8ஆம் தேதி துவக்க விழா
இதன் தொடக்க விழா வரும் எட்டாம் தேதி ஒகேனக்கல் காவிரி கரையில் நடக்கிறது. இது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சாந்தி கூறியதாவது
தமிழகத்தின் மாநில மரமான பனைமரத்தை அழியாமல் பாதுகாக்கவும், இளைஞர்களிடம் பனையின் சிறப்பை கொண்டு செல்லும் விதமாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு தமிழ்நாடு தன்னார்வலர்கள் அமைப்பு தமிழ்நாடு பசுமை இயக்கம் இணைந்து காவிரி கரையில் ஒரு கோடி விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை வரும் எட்டாம் தேதி தொடங்கி வைக்கப்பட உள்ளது.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி தமிழகம் முழுக்க பண விதைகள் சேகரிக்கும் பணி நடக்கிறது. செப்டம்பர் மாதம் 5 கட்டங்களாக பண விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரை தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காவிரி கரையின் இரு பக்கங்களிலும் 416 கி . மீ தொலைவிற்கு நடவிருக்கிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட நீர்நிலைகளிலும் பனை விதைகளை நடும் பணி தொடர இருக்கிறது. இப்பணியில் 100க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் ஒரு லட்சம் தன்னார்வலர்கள், மாணவர்கள் சமூக சேவகர்கள், தொண்டு நிறுவனங்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பங்கேற்று பனை விதைகளை நடுகின்றனர்.
அனைவரையும் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு
இதில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவன ங்கள் இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். பங்கேற்பவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் வழங்கப்படும்.
காவிரி கரையில் ஒரு கோடி பனை விதைகளை நடும் பணியில் தர்மபுரி மாவட்ட மாணவ, மாணவிகள் சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மாநில மரமான பனைமரத்தை நட ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.